தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்தவரும், திமுகவின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவருமான மு.கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி இதே நாளில் மறைந்தார். இந்நிலையில், இன்று ஆக.7-ம் தேதி கருணாநிதியின் 6-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு, இன்று காலை திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் ஆயில்மில் செக் போஸ்ட் அருகே புதிதாக நிறுவப்பட்ட கலைஞரின் வெண்கல திரு உருவ சிலையை, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் காணொளி வாயிலாக திறந்து வைத்தனர்.
விழாவிற்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே என் சேகரன், மாமன்ற உறுப்பினர் கார்த்திக், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மதிமுக மணவை தமிழ் மாணிக்கம், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சங்கிலி முத்து, செந்தமிழ் இனியன் மற்றும் திமுகவின் செயலாளர் நீலமேகம் உள்ளிட்ட திரளான திமுகவினர், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் செய்திருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“