உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிடம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கால் செய்து பேசினார்.
அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ஆர்.பிரக்ஞானந்தா 2ம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வாங்கினார். உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றார். இந்நிலையில் இறுதி சுற்றின் முதல் இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிடம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ காலில் பேசினார். ” நல்லா இருக்கீங்களா? உங்கள் வெற்றிக்கு மிகவும் ஆவலாக இருந்தேன். இரண்டு முறை டிராவில் ஆட்டத்தை முடித்தீர்கள். நல்ல முயற்சி செய்துள்ளீர்கள். கவலை பட வேண்டாம். அடுத்த முறை நீங்கள்தான் சாம்பியன் பட்டத்தை பெறுவீர்கள். அம்மா நல்லா இருக்காங்களா?. நான் நாகப்பட்டணத்தில் இருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு எப்போது வருவீர்கள். தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் சொல்லுங்கள். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உங்களை பார்க்க வருவார். இதைத்தொடர்ந்து என்னை வந்து சந்திக்கவும். வாழ்த்துகள்” என்று வீடியோ காலில் பேசினார்.
வீடியோ காலில் பேசிய பிரக்ஞானந்தாவின் தாய் “ நாங்கள் நன்றாக இருக்கிறோம். உங்கள் அனைவரின் உத்வேகத்தால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. ஜெர்மனியில் ஒரு போட்டி இருக்கிறது. அதை முடித்துவிட்டு 26ம் தேதி தமிழ்நாடு வருகிறோம் “ என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“