கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23-ந் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என.ஐ.ஏ.வுக்கு மாற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
Advertisment
கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23-ந் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சிலிண்டர் வெடிப்பு பயங்கரராதிகளின் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று கூறிய தமிழக பாஜக தலைவர் அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்தார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு பின்னால் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்றால் இந்த வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும் என்றும் கொங்கு பகுதிகளான சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பயங்கரவாதிகளின் புகளிடமாக உள்ளது என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனிடையே கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை உக்கடம் கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23-ந் தேதி நடந்த கார் சிலிணடர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவாக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் கோவை உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இது போன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும், இருக்க வாய்ப்புள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகள் செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று கூறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“