கொச்சின் பகுதியில் இருந்து எல்.பி.ஜி கேஸ் ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி, கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பியது. அப்போது, எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த கேஸ் நிரம்பிய டேங்கர் மட்டும் தனியாக கழன்று விழுந்துள்ளது. அதில் சேதம் ஏற்பட்டு கேஸ் வெளியேறியதால், லாரியில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீச்சி அடித்து கேஸ் வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, பாதுகாப்பு நடவடிக்கையாக சம்பவ இடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் கேஸ் நிறுவன பொறியாளர்கள் ஆகியோர் விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் வரை அதன் அருகேயுள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்காக திருச்சியில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, கேஸ் லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, டேங்கர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட பகுதியில் மத்திய பெட்ரோலிய நிறுவனத்தின் மெக்கானிக் காண்ட்ராக்டர் ராபர்ட் பார்வையிட்டார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிகாலை மேம்பாலத்தில் திரும்பும் பொழுது டேங்கர் விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் லீக்கேஜ் அடைக்கப்பட்டது. இந்த விபத்தால் 80 முதல் 100 கிலோ வரை லீக்கேஜ் ஆகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பைபாஸ் சாலையில் தான் டேங்கர் லாரி கொண்டு செல்லப்படும். இன்று தவறுதலாக இப்பகுதிக்கு வாகனம் வந்ததாக தெரிகிறது. இந்த விபத்து எதிர்பாராமல் நிகழ்ந்தது" எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, டேங்கர் லாரியின் கான்வாய் பாதுகாப்பாக புறப்பட்டது. ஏறத்தாழ 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு டேங்கர் லாரி மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டேங்கர் லாரியை 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 2 ஆம்புலன்ஸ்கள் பின்தொடர்ந்தன. இந்த டேங்கர் லாரி, பீளமேடு பகுதியில் உள்ள எஃப்.சி.ஐ குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கைது
இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காலை உப்பிலிபாளையம் மேம்பாலம் மேல் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துள்ளான சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலானாய்வு போலீசார் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது செய்து உள்ளனர்.
ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் மீது பி.என்.எஸ் 281 ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், பி.என்.எஸ் 110 மரணம் விளைக்கக் கூடிய வித்தத்தில் ஓட்டுதல், பி.என்.எஸ் 324 (4) வாகனத்தை வேகமாக ஓட்டுதல், 9 பி வெடிபொருள் சட்டம், 23 பெட்ரோலியம் ஏக்ட் , 8 ஆர்/டபிள்யூ 15 என்விராண்டல் ஏக்ட், மோட்டார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலிசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு உள்ளார்.