ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு : 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஏற்பாடு

ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

ஆட்சியர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம். கடைசியாக 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலை உள்ளிட்ட அம்சங்கள் காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை.

ஆட்சியர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டியிருக்கிறார். சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடி அரங்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மொத்தம் 3 நாடகள் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மாநாட்டின் முதல் நாளான இன்று (மார்ச் 5-ம் தேதி) ஆட்சியர்களும், மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் கூட்டாக பங்கேற்கிறார்கள். அனைத்து அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். காலை 10 மணிக்கு இந்த மாநாடு தொடங்கியது.

மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நீண்ட காலமாக துப்பு துலக்காத வழக்குகள், அவை தொடர்பாக அண்டை மாவட்டங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுமானால் அது தொடர்பான தகவல்கள் பறிமாறப் படுகின்றன.

மாநாட்டின் 2-வது நாளான நாளை (மார்ச் 6) மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு திட்டப் பணிகளின் நிலை, புதிய திட்டங்களுக்கான வாய்ப்புகள் குறித்து இதில் விவாதிக்கப்படும். இறுதி நாளான மார்ச் 7-ம் தேதி போலீஸ் அதிகாரிகள் மட்டும் பங்கேற்கும் மாநாடு நடைபெற இருக்கிறது.

குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஆட்சியர்கள் அல்லது போலீஸ் அதிகாரிகள் தங்கள் சுய முயற்சியில் சில புதிய திட்டங்களை செயல் படுத்துவது உண்டு. அந்தத் திட்டங்களை இந்த மாநாட்டில் அவர்கள் குறிப்பிடுவார்கள். அது சிறப்பான திட்டமாக தெரிந்தால், மாநிலம் முழுவதும் அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கும் வாய்ப்பு உண்டு.

3 நாள் மாநாடு முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close