மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை

விரும்பிய படிப்பில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் பணி இப்போதே தொடங்கி விட்டது.

பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அதன் ஆசிரியர்களின் கடுமையான உழைப்பு தான் காரணமாக இருக்க முடியும். அதே ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாமல் தீய நோக்கத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட்டால் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள் கூட மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது தருமபுரி அரசு கலைக்கல்லூரி.

தமிழகத்தின் தலைசிறந்த அரசுக் கல்லூரிகளில் ஒன்றாக தருமபுரி அரசு கலைக்கல்லூரி திகழ்ந்தது. கடந்த காலங்களில் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூட தங்கள் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் சேராமல் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றனர் என்பதிலிருந்தே அக்கல்லூரியின் சிறப்பை புரிந்து கொள்ள முடியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசியத் தரச்சான்று நிறுவனத்திடமிருந்து முதல் தரச் சான்று ( A++) பெற்றிருந்த அக்கல்லூரி இப்போது தரவரிசையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இதற்குக் காரணம் கல்லூரியில் ஆசிரியர்களிடையே நிலவும் குழு மோதலும், ஊழலும் தான்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மொத்தம் 19 துறைகள் உள்ளன. அவற்றில் 11 துறைகளின் தலைவர்களாகவும், பொறுப்பு தலைவர்களாகவும் இருப்பவர்கள் ஒரு குழுவாகவும், மற்றவர்கள் தனித்தனி குழுக்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஒரு துறையிலேயே அதன் தலைவரும், அவருக்கு ஆதரவான உதவிப் பேராசிரியர்கள் ஒரு குழுவாகவும், மற்றவர்கள் ஒரு குழுவாகவும் செயல்பட்டு வருவதால் தருமபுரி அரசுக் கலைக்கல்லூரியில் கல்வித்தரம் வெகுவேகமாக சீரழிந்து வருகிறது.

மாணவர் சேர்க்கைத் தொடங்கி கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் வரை அனைத்திலும் முறைகேடுகளும், ஒருசார்பு நடவடிக்கைகளும் தலைவிரித்தாடுகின்றன. கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் போது இட ஒதுக்கீட்டு விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும். ஆனால், தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் எந்த இட ஒதுக்கீடும் கடைபிடிக்கப்படுவதில்லை. தருமபுரி கலைக்கல்லூரியில் மொத்தம் 80 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45-க்கும் மேற்பட்டோர் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கல்லூரியில் துறைத்தலைவர்களாக இருக்கும் உதவிப் பேராசிரியர்கள் எந்த இட ஒதுக்கீட்டு விதியையும் கடைபிடிக்காமல் தங்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சலுகை காட்டியதால் தகுதியும், திறமையும், இல்லாத பலர் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி அரசுக் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதால் மாணவர்களுக்கு இருபிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் வகுப்புக்கு 50 அல்லது 60 மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், கவுரவ விரிவுரையாளர்கள் நடத்தும் மாலை நேர வகுப்புகளுக்கு சரியான எண்ணிக்கையில் மாணவர்களை சேர்க்கும் கல்லூரி நிர்வாகம் முழு நேர ஆசிரியர்கள் எடுக்கும் வகுப்புகளுக்கு வழக்கத்தை விட குறைவாகவே மாணவர்களை சேர்க்கின்றனர். இதனால் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 10 மாணவர்கள் கூடுதலாக பயின்று பட்டம் பெறும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது.

மாணவர்கள் சேர்க்கையிலும் பெருமளவில் முறைகேடுகள் நடக்கின்றன. மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்; இட ஒதுக்கீட்டு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தருமபுரி கலைக்கல்லூரியை பொறுத்தவறை ஒவ்வொரு பாடப்பிரிவிலும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பாமல் வைத்திருந்து, மாணவர் சேர்க்கைக்கு கடைசி நாள் அன்று ஒவ்வொரு துறைத்தலைவரும் தங்களுக்கு வேண்டியவர்களை மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் வராண்டா மாணவர் சேர்க்கை என்ற பெயரில் சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், கல்லூரி துறைத்தலைவர்களுக்கு நெருக்கமான மாணவர்களுக்கு மட்டும் தகுதி இல்லாவிட்டாலும் கூட இடம் கிடைத்து விடுகிறது. இவ்வாறு சேர்க்கப்படுபவர்களில் பெரும்பான்மையினர் குறிப்பிட்ட சமுதாயத்தினராக இருப்பது தான் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையில் மிகப் பெரிய முறைகேடு நடத்த கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. விரும்பிய படிப்பில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் பணி இப்போதே தொடங்கி விட்டது. இதைத் தடுத்து நிறுத்துவதுடன், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக மாணவர் சேர்க்கையை கண்காணிப்பதற்காக கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை அமைப்பதுடன், விண்ணப்பங்களை பெறுவதில் தொடங்கி தரவரிசைப் பட்டியல், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல், தகுதி காண் மதிப்பெண் உள்ளிட்ட அனைத்தையும் வெளிப்படையான முறையில் வெளியிட வேண்டும்.

×Close
×Close