Advertisment

பொதுவுடமை தூண் ஒன்று சாய்ந்தது: தா பாண்டியன் மரணம்; தலைவர்கள் இரங்கல்

தா.பாண்டியன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது என்று கூறி இரங்கல் தெரிவிதுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tha pandian passes away, t pandian passes away, communist party of india senior leader t pandian died, cpi, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தா பாண்டியன் மரணம், தலைவர்கள் இரங்கல், senior leader t pandian death, tamil nadu, kamal haasan condolence, mk stalin condolence, தா பாண்டியன், political leaders condolece to t pandian demise

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான தா.பாண்டியன் முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் மேலும் மோசமடைந்தது.

இதனைத் தொடர்ந்து, தா.பாண்டியனின் உடல்நிலை குறித்து நேற்று இரவு சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியது. இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தங்கள் கட்சி தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக பிப்ரவரி 24ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோய்த்தொற்று மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையிலும் பாண்டியன் உடல் நிலையில் மாற்றம் காணாத நிலை நீடிக்கிறது. அவரை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வந்து நலம் விசாரித்துவிட்டு சென்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், “ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடர்ந்து திவீர சிகிசையில் இருந்த தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி இன்று (பிப்ரவரி 26) காலமானார். அவரது மறைவு அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சியினராலும் மதிக்கப்பட்ட மூத்த தலைவர் தா.பாண்டியன் வாழ்நாள் முழுவதும் பொதுவுடைமைக் கருத்துகளை முழங்கிவந்தார்.

இந்திய அளவில் பல அரசியல் தலைவர்களுடன் பயணித்த தா.பாண்டியன் செப்டம்பர் 25, 1932ம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, கீழ்வெள்ளமலைப்பட்டியில் பிறந்தார். தா.பாண்டியனின் முழு பெயர் டேவிட் பாண்டியன்.

காரைக்குடியில் அழகப்பா கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக தனது வாழ்க்கையைத் துவங்கிய தா.பாண்டியன், 1953 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர், டாங்கே, எம்.கல்யானசுந்தரம் ஆகியோருடன் இணைந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய அவர் 1983ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை அக்கட்சியின் மாநில செயலாளராக இருந்தார்.

1989ம் ஆண்டும் 1991ம் ஆண்டும் வடசென்னை மக்களவைத் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.பி ஆனார். இதையடுத்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்துவிட்டு அவர் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 3 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தார்.

எழுத்தாற்றால், பேச்சாற்றல் மிக்க தா.பாண்டியன் இந்திய அளவில் பல தேசிய தலைவர்களுடன் பயணித்தவர். பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக எழுதியுள்ளார். பல மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழுக்கு கொண்டுவந்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி இதழில் சவுக்கடி என்ற பெயரில் கடுமையான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதி யார் இந்த சவுக்கடி என்று அரசியல் தலைவர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பல தேசிய தலைவர்களின் பேச்சுகளை மேடையில் மொழிபெயர்த்தவர்.

அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழக அரசியலில் தீவிரமாக செயல்பட்ட தா.பாண்டியனின் மனைவி ஜாய்ஸ் பாண்டியன் 2010ம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தா. பாண்டியனின் மகன் டேவிட் ஜவஹர் சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சகோதரர் தா.பாண்டியன் காலமான செய்தியறிந்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தா.பாண்டியனின் மறைவு தமிழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பேரிழப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தா.பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுவுடைமைப் போராளி - ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல் - பண்பாளர் - தமிழ் மண்ணை அடிமையாக விடமாட்டோம் என சிம்மக்குரல் எழுப்பிய தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பேரிழப்பு” என்று தெரிவித்துள்ளார். மேலும், உங்கள்தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் அஞ்சலி செலுத்தினோம். ஆழ்ந்த இரங்கல்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தா.பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தம் வாழ்நாள் முழுவதும் பொதுவுடைமைக் கொள்கைக்காகப் பாடுபட்டு வந்த தா.பாண்டியன் தம் முச்சை நிறுத்திக்கொண்டார். தா.பாண்டியன் தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் தன்னிகரற்ற சொற்பொழிவாளர். ஆற்றொழுக்குபோல தங்கு தடையின்றி தமது கருத்துகளை எடுத்து உரைப்பவர். மிகச் சிறந்த எழுத்தாளர், இலக்கியவாதி எண்ணற்ற கட்டுரைகள், நூல்களை எழுதியவர். நாடாளுமன்றத்தில் தமது வாதங்களைத் திறம்பட எடுத்து உரைப்பவர். தா.பா-வின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கும் தமிழ்நட்டின் பொது வாழ்விற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு. கடந்த 18ம் தேதி மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில், அவர் பேசியதை மேடையில் இருந்து கேட்டேன். அப்போது பொதுவுடைக் கொள்கை வென்றே தீரும் அதற்காக தன் மூச்சு இருக்கின்ற வரையிலும் முழங்குவேன் என்று சொன்ன போது மெய் சிலிர்த்துப்போனேன். தா.பா மறைவால் வேதனையில் தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் கட்சி கடந்து அவரை நேசிப்பவர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தோழர் தா.பா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும். ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர். முற்போக்கு சிந்தாந்த தளத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவருக்கு எமது வீரவணக்கம்.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தா.பாண்டியன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது என்று கூறி இரங்கல் தெரிவிதுள்ளார்.

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு” என்று இரங்கள் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானா‌ர் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment