Advertisment

சோனியா பற்றி சீமான் விமர்சனம்: கைது செய்ய டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு பேசுவதாக காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், போபண்ணா ஆகியோர் இன்று சென்னையில் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.

author-image
WebDesk
New Update
congress party gives complaint against Seeman at DGP, congress complaint on seeman for derogatory speech on rajiv gandhi and sonia gandhi, tamil nadu congress, congress mp jayakmar, tamil nadu congress, ks alagiri, - சோனியா பற்றி சீமான் விமர்சனம், சீமானை கைது செய்ய டிஜிபியிடம் காங்கிரஸ் புகார், seeman, naam tamilar katchi, sonia gandhi, rajiv gandhi

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் மற்றும் போபண்ணா ஆகியோர் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.

Advertisment

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜிவ் காந்தியையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு பேசுவதாகவும் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், போபண்ணா ஆகியோர் இன்று சென்னையில் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.

டிஜிபியிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், “ஆகஸ்ட் 14ம் தேதி 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போது, இதே சீமான்தான், பிரசாரத்தில், நாங்கள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இங்கேதா புதைத்திருக்கிறோம் என்று மார்தட்டி பேசி காவல் துறைக்கு தைரியம் இருந்தால், காவல்துறைக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கட்டும். ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள்தான் என்று சொன்னார். அன்றைய தினமே நானும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இதே அலுவலகம் வந்து அவர் மீது ஒரு புகார் மனுவைக் கொடுத்தோம். ஆனால், அந்த புகார் மனு என்னவானது என்றுகூட எனக்கு பதிலில்லை. அதே போல, இந்த உள்ளாட்சி தேர்தலிலே இங்கே இருக்கிற காங்கிரஸ்காரர்கள் எல்லாம் ராஜீவ் காந்திக்குக் பிறந்தவர்களா, இவர்கள் எல்லாம் ஏதோ அவருடைய பிள்ளைகள் போல நடந்துகொள்கிறார்கள் என்றும் சோனியாக காந்தி சக்காளத்தி பிள்ளைகளா என்றும் மிக அவதூறான வார்த்தையைப் பயன்படுத்தி பேசியிருக்கிறார். எனவே நாங்கள் இன்றைய தினம், காவல்துறை தலைமை அதிகாரியை நேரில் சந்தித்து இவர் வன்முறையைத் தூண்டுவதுபோன்ற பேச்சுக்களை பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் இது நாட்டிலே அமைதியைக் குலைக்கும் என்று காங்கிரஸ்கார்கள் நெடுநாளைக்கு அமைதிகாக்க மாட்டார்கள் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் சொல்லியிருக்கிறோம். அவர் (சீமான்) செய்வது நாட்டினுடைய ஜனநாயகத்துக்கே ஆபத்தானது. அவருடைய நடைமுறை நாகரீக அரசியலிலே ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை அதிகாரியை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறோம்.

டிஜிபி சைலேந்திர பாபு எங்களிடம் 15 நிமிடத்திற்கு மேல் விசாரித்து, நாங்கள் இதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்திருக்கிறார். சரியான நடவடிக்கை காவல்துறை எடுக்காவிட்டால், எங்களுடைய கடந்த கால மனு கிடப்பிலே போட்டது போன்று இருந்தால், காங்கிரஸ் தலைமையோடு ஆலோசித்து இது போன்றவர்களை அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் இயக்கமும் காங்கிரஸ் தொண்டர்களும் உரிய அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம்.” என்று கூறினார்.

ஹெச் ராஜாவும் சீமானும் பொது இடங்களில் இது போன்ற வார்த்தைகளைப் பேசி வருகிறார்கள் இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “இவர்கள் இரண்டு பேருமே அரசியலில் ஒரு சாபக்கேடு, நன்றாக நடந்துகொண்டிருக்கிற அரசியலிலே அசிங்கத்தை வாரித் தெளிக்கிற அயோக்கியத்தனமான பேச்சை பேசுபவர்கள்.” என்று கூறினார்.

இதனிடையே, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து அரசியல் தலைவர்களை அவதூறாக பேசுவதாகவும் சீமான் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத, சமூக சீர்குலைவு சக்தியாக சீமான் விளங்கி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் படுகொலைக்குப் பிறகு 1991 இல் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பு எனக் கூறி, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகள் தடை செய்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014 இல் நீட்டிக்கப்பட்ட தடை 2019 இல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்கிற வகையில் நீதிபதி சங்கித்தா திங்கரா சேகல் தலைமையிலான தீர்ப்பாயம் பலரது கருத்துக் கேட்பிற்கு பிறகு மேலும் தடையை நீட்டித்து உறுதி செய்தது. இந்த தடை நீட்டிப்பிற்குக் காரணம் விடுதலைப் புலிகள் அமைப்பு வன்முறையிலும், சீர்குலைவு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்துகிற வகையில் செயல்படுவதாகத் தீர்ப்பாயம் உறுதி செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருவதையும் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், அன்னை சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது.

இத்தகைய கூட்டங்களில் வன்முறையைத் தூண்டுகிற வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற போக்கிலும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், துணிவிருந்தால் என் மீது காவல்துறை வழக்கு தொடுக்கட்டும், கைது செய்யட்டும், சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு சவால் விட்டுத் தொடர்ந்து பேசி வருகிறார். எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத, அடங்க மறுக்கிற அடாவடித்தனமாகச் செயல்படுகிற சமூக சீர்குலைவு சக்தியாக சீமான் விளங்கி வருகிறார். சீமான் மீது தமிழக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து, இவரது சட்டவிரோத பேச்சின் அடிப்படையில் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல் பகுதியில் இவர் தங்கியிருந்த இடங்களில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும், தமிழ்நாட்டிலிருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இவர் ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையிலிருந்து சமீபத்தில் வெளிவந்திருக்கிறார். சர்வதேச போதை கடத்தலில் சம்மந்தப்பட்டு, பாகிஸ்தான், துபாய், இலங்கையில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டிருப்பதற்கான ஆதாரங்களும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் சிக்கியுள்ளன. அதேபோல, ஆயுதங்கள் கடத்தலிலும் இவர் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. வெளிநாடுகளில் வாழ்கிற விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இவர் மூலமாக பெரும் நிதியை வழங்கி வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விசாரணை முடுக்கி விடப்படுவதன் மூலம் தமிழகத்தில் தேசவிரோத சக்திகளின் நடமாட்டத்தைத் தடுக்க முடியும். இல்லையெனில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளால் தமிழகத்தின் அமைதியான சூழல் பாதிக்கப்படும் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன்.

அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்குப் புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்பட்டு வருகிற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இத்தகைய சீர்குலைவு சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவில்லையெனில், அவரது வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான தீவிரவாத பாதைக்குச் செல்ல நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். இந்த போக்கு தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவரது பேச்சுகள், நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, சட்ட விரோதமாகச் செயல்படும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, தமிழகத்தின் அமைதிக்கு பெரும் துணையாக இருக்கும் என்பதைக் கூற விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளனர்.

ஆனால், நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிமான் அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் குறிப்பிட்டுள்ள வீடியோ மிகவும் பழைய வீடியோ என்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு அது இப்போதுதான் தெரிந்துள்ளது. இதுதான் காங்கிரஸ் கட்சியினரின் வேகமா என்று சமுக ஊடகங்களில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Congress Seeman Naam Tamilar Katchi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment