சேலத்தில் உள்ள அருள்மிகு சித்தேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம், கஞ்சமலையில் உள்ள சித்தேஸ்வர சுவாமி கோயிலில் செப்டம்பர் 15ம் தேதி குடமுழுக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை தமிழ் திருமுறைகள், தமிழ் சைவ மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிடக் கோரி தமிழ் வேத ஆகம கல்வி பயிற்சி வழங்கும் சத்யபாமா அறக்கட்டளை தலைவர் சத்யபாமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், கோயில் குட முழுக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டபோதும், குட முழுக்குகள் சமஸ்கிருதத்திலேயே நடத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் குடமுழுக்கு விழாக்களில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதப்படுவதாக அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“