சேகர் ரெட்டியை தீர்த்துக் கட்ட சிறையில் சதி

தங்களது கூட்டாளிகள் மூலம் சேகர் ரெட்டியை தீர்த்துக் கட்ட புழல் சிறையில் சிலர் சதித்திட்டம் தீட்டியதாக சிறைத்துறை எச்சரிக்கை விடுத்தது.

தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவில் சேகர் ரெட்டி புகார் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள், அரசு உயர் அதிகாரிகளுக்கு மிக நெருக்கமானவராக கருதப்படுபவர் சேகர் ரெட்டி. தமிழக பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோதனை நடத்தினர். அதில், கட்டுக்கட்டாக பணம், தங்கம் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டன. மேலும், மதிப்பிழக்க நடவடிக்கைக்கு பின் வெளியிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளும் கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டன.

அதனையடுத்து, இவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே, தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன் ராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், புதிய நோட்டுகள் வைத்திருந்ததாக சிபிஐ போலீஸாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த இரு வழக்குகளிலும் சேகர் ரெட்டிக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களது கூட்டாளிகள் மூலம் சேகர் ரெட்டியை தீர்த்துக் கட்ட புழல் சிறையில் சிலர் சதித்திட்டம் தீட்டியதாக சிறைத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவில் சேகர் ரெட்டி புகார் அளித்துள்ளார்.

மேலும், மத்திய, மாநில உள்துறை செயலாளர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி-க்கு தமிழக உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக முக்கியப் புள்ளிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் சேகர் ரெட்டியை தீர்த்துக் கட்டுவதன் மூலம், தங்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ள யாரேனும் முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

×Close
×Close