Advertisment

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் வீழ்ச்சி; தேர்தல் காரணம் இல்லை – சுகாதாரத்துறை செயலாளர்

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கொரோனா புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

Corona positivity rate fall in all over Tamilnadu: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisment

நேற்று (ஜனவரி 31), தமிழகத்தில் புதிதாக 19,280 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேநேரம் 25,056 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது தமிழகத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சம் என 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நேற்று 20 பேர் இறந்துள்ள நிலையில், மாநிலத்தில் இதுவரை 37,564 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

புதிய பாதிப்புகளை பொறுத்தவரை, சென்னையில் 2,897, கோயம்புத்தூரில் 2,456, செங்கல்பட்டு (1,430), திருப்பூர் (1,425), சேலம் (1,101), ஈரோடு (1,070) ஆகிய இடங்களில் தலா 1000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேற்கு மாவட்டங்களைத் தவிர, ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் பாதிப்பு அதிகமாக உள்ளது, ஆனால் மாநிலம் முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகின்றன.

நேற்றைய 20 இறப்புகளில், சென்னையில் 6 பேர், கோவையில் 3 பேர் மற்றும் செங்கல்பட்டு, திருச்சி மற்றும் காஞ்சிபுரத்தில் தலா இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தலா இறப்புகள் பதிவாகியுள்ளன.

"மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் புதிய பாதிப்புகளின் விரைவான வீழ்ச்சியை நாங்கள் காண்கிறோம். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளது. இதன் வித்தியாசம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது" என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் கூறினார்.

புதிய பாதிப்புகள் மற்றும் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு வெள்ளிக்கிழமை 1,623, சனிக்கிழமை 3,467 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 4,386 உடன் ஒப்பிடும்போது திங்களன்று 5,776 என அதிகமாக இருந்தது.

மேலும், "சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து தெரிவிப்பதைப் போலல்லாமல், இதற்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் குறைந்து வருகிறது," என்றும் சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்.

"இரண்டாவது அலையைப் போலல்லாமல், தொற்று பாதித்தவர்களில் 5% நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் உள்ளனர். மருந்துகள் அல்லது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, ஆனால் பல நோயாளிகள் தொடர்ந்து சிக்கல்களைக் கொண்டுள்ளனர். குறைந்தது 15% நோயாளிகள் டெல்டா மாறுபாட்டால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடப்படாத நோயாளிகள் அல்லது இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே ICU சிகிச்சை தேவைப்படுகிறது," என்று சுகாதாரத்துறைச் செயலாளர் கூறினார். உதாரணமாக, கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 121 பேரில் 60க்கும் குறைவானவர்களுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்பட்டது, மேலும், மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே தமிழகத்தில் 15-18 வயதுடையவர்களில் 1.04 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் எடுத்துள்ளனர். இதுவரை 3.5 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment