Vegetable shortage in chennai : சென்னையில் காய்கறிகள் கடும் தட்டுப்பாடு நிலவிவருவதால், தோட்டக்கலைத்துறை சார்பில் நகரில் 5 இடங்களில் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததற்கு கோயம்பேடு சந்தை தான் முக்கிய பங்காற்றியது என்ற காரணம் தெரிந்த நிலையில், சென்னை மாநகராட்சி உடனடியாக, கோயம்பேடு சந்தையை மூட உத்தரவிட்டது. சென்னையை அடுத்த திருமழிசை பகுதியில், சந்தை இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருமழிசை பகுதியில் காய்கறி சந்தை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு இப்பணிகள் நிறைவடைய மேலும் சில நாட்கள் ஆகும் என்பதால், சென்னை மக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறு வியாபாரிகள், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலையை பன்மடங்கு அதிகரித்துள்ளனர். இதன்காரணமாக, சென்னைவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிராட்வே பகுதியில், தக்காளி கிலோ ரூ.100 வரை விற்கப்படுவதாக அப்பகுதிவாசி தெரிவித்துள்ளார்.
காய்கறி தட்டுப்பாடு மற்றும் அதிக விலையால் தவித்து வரும் சென்னை மக்களுக்கு உதவும் வகையில், மாநில அரசின் தோட்டக்கலைத்துறை, கிருஷ்ணகிரி, பெங்களூரு பகுதிகளிலிருந்து 500 டன் தக்காளி, வெங்காயங்களையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து கீரைகள், கத்திரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்டவைகளை டன் கணக்கில் வரவழைத்துள்ளது.
சென்னை மக்களின் காய்கறி தேவைகளை நிறைவேற்றி வந்த கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், திருமழிசை சந்தை முழுமையாக செயல்படும் வரை, நகரின் 5 இடங்களில் விற்பனை மையங்களை அமைத்து, மக்களுக்கு உதவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருமழிசையில் மே 10க்கு பிறகு சந்தை : திருமழிசையில் மே 10-ஆம் தேதிக்குப் பிறகே காய்கறி சந்தை செயல்படத் தொடங்கும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil