Advertisment

வெல்லமண்டி நடராஜன் மீது சி.பி.சி.ஐ.டி விசாரணையா? மாநகராட்சி கூட்டத்தில் ஒலித்த குரல்

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், திறந்த மைக்கில் கவுன்சிலர்கள் சொல்வதை செய்யக்கூடாது என்றும், அதிகாரிகள் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்

author-image
WebDesk
New Update
வெல்லமண்டி நடராஜன் மீது சி.பி.சி.ஐ.டி விசாரணையா? மாநகராட்சி கூட்டத்தில் ஒலித்த குரல்

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் கடந்த 26-ம் தேதி மாநகராட்சி காமராஜர் மன்றத்தில் உள்ள லூர்துசாமி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட மன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வார்டுகளில் உள்ள பல்வேறு குறைகள் குறித்தும் அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர்.

Advertisment

திமுக மேயர் அங்கமாக இருக்கும் திருச்சி மாநகராட்சியில் திமுக வார்டு உறுப்பினர்களே மாநகராட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கொட்டினர். இது குறித்து திருச்சி மாநகராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் பன்னீர்செல்வம் பேசுகையில்; தமது பகுதியில் அமைக்கப்படும் குடிநீர் குழாய்கள் தரம் இல்லை என்றும் வாரம் ஒரு குழாய்கள் மாற்றப்படுவதாகவும், சத்திரம் பகுதியில் பழைய கரூர் ரோட்டில் அடிக்கடி பாதாள சாக்கடை பழைய குழாய்கள் வெடித்து விடுகின்றன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது எனவும் குற்றச்சாட்டை பதிவு செய்தார்.

அதனைத்தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர் ராமதாஸ் பேசும்போது, கருமண்டபம் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 4, 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். லாரி தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்படவில்லை என செல்கிறார்கள் என கூறியுள்ளார்.

19-வது வார்டு திமுக கவுன்சிலர் சாதிக் பாட்ஷா பேசும்போது, எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு மரக்கடை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. அந்த தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற காரணத்தினால் மலைக்கோட்டை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் அனுப்பி வைக்கப்படுவதால் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதனால் தேவையான தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே தண்ணீர் திறப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றார்.

publive-image

திமுகவின் கூட்டணி கட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாமன்ற உறுப்பினர்களின் அதிகாரம் என்ன என்பது குறித்து அதற்கான ஆவணங்களை அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், திறந்த மைக்கில் கவுன்சிலர்கள் சொல்வதை செய்யக்கூடாது என்றும், அதிகாரிகள் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்றும் கூறியதாக பிரபாகரன் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இவரது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர்களின் அதிகாரம் குறித்த அரசாணை விரைவில் பெறப்பட்டு அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட மாமன்ற உறுப்பினர் செய்த நடவடிக்கையால் அவரை மட்டும் குறிப்பிட்டு ஆணையர் கூறினார்.  எனவே தவறான தகவலை பதிவிட வேண்டாம் என்று தெரிவித்தார்.

அதேநேரம் திமுக கவுன்சிலர் லீலா வேலுவை அவமானப்படுத்தும் வகையில் பேசிய மாநகராட்சி அதிகாரி மாமன்றத்திலேயே அனைவரின் முன்னிலையிலும் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காஜாமலை விஜய் பேசுகையில்; மண்டல வாரியாக தூய்மைப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் பலர் அப்பணிக்கு வராமலேயே மாநகராட்சியில் ஊதியம் வாங்கும் நிலை இருக்கின்றது என்றார். மேலும், திடக்கழிவு மேலாண்மைக்கான பணியாளர்களை வேறு பணியில் மாநகராட்சி ஈடுபடுத்தக்கூடாது. மேயர், மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சிக்குட்பட்ட எந்தப்பகுதிக்கும் ஆய்வுக்கு செல்லும்போது அந்தப்பகுதி மாமன்ற உறுப்பினர்களுக்கு முங்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். பெரும்பாலும், மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமலேயே ஆணையர், மேயர் உள்பட அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வது வருத்தமளிக்கின்றது என கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுரேஷ் பேசும்போது, மாவடி குளத்தை உடனடியாக தூர்வார வேண்டும். கொட்டப்பட்டு குளத்திலிருந்து மாவடிக்குளம் செல்லும் மழை நீர் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு, தூர்வாரப்படாமல் இருப்பதால் மழைநீரை சேகரிக்க முடியாத நிலையில் இருக்கின்றது. மாநகர சாலைகளில் ஆங்காங்கே கேபிள் ஒயர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே உடனே இதை சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை முற்றிலுமாக முடித்து விட்டு சாலைகளை போட வேண்டும் என்றார்.

47-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அமமுகவை சேர்ந்த செந்தில்நாதன் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது தில்லைநகரில் ரூ.3 கோடியில் வணிக வளாகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாமன்றத்திலேயே தீர்மானம் வைக்கப்பட்டிருப்பதால் அதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், அப்போதைக்கு அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரை சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைக்க இந்த மாமன்றம் வழிவகை செய்யவேண்டும் என பேசினார்.

இதே கோரிக்கையை திமுக கவுன்சிலம் முத்துச்செல்வமும் வலியுறுத்தினார். ஆனால்  மேயர் இந்தக் கோரிக்கைகளை ஏற்க முடியாது என மறுத்துவிட்டார். தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள் வாரிசு அடிப்படையில் மாநகராட்சியில் பணியாற்றி பணியின்போது உயிரிழந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கபட்டது.

மேலும் மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 40 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வு பெற்று காலியாக உள்ள அந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கப்பட்டது. அதேபோல் திருச்சி மாநகராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்கள் அனைத்தையும் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இந்த புள்ளி கோரப்பட்டுள்ளதாக விரைவில் அதற்கான பணிகள் துவங்க உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது திருச்சி மாநகராட்சியில் குப்பை அள்ளுவதற்கு இயக்கப்பட்டு வரும் அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு அந்த வாகனங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் திருச்சி மாநகராட்சியில் டெக்னிக்கல் உதவியாளராக பணியாற்றக்கூடிய பலர் 30 ஆண்டுகளுக்கு மேலாக அதே பணியில் நீடித்து வருகின்றனர். எனவே, அவர்களுக்கான பதவி உயர்வை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் காலியாக உள்ள தனியாருக்கு சொந்தமான பராமரிக்கப்படாமல் கிடக்கும் நிலங்களில் இரண்டு இடங்களை மாநகராட்சி கைப்பற்றி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களால் இதுவரை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஒப்பந்த புள்ளிகள் குறித்தும் 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.  

இந்த குறைகளை கேட்டறிந்த மேயர் அன்பழகன் பேசும்போது, பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து சாலைகளும் போடப்படும். கருமண்டபம் பகுதியில் சில வார்டுகளை சேர்த்து தண்ணீர் சப்ளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார். மாநகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்ய அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சியின் நடவடிக்கைகள் திருப்தி இல்லாததை அனைத்து கவுன்சிலர்களுமே சுட்டிக்காட்டும் நிலைக்கு திருச்சி மாநகராட்சி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. காவிரி-கொள்ளிடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு வாய்க்கால்கள், ஏரி, குளங்கள் வறண்டிருப்பது முறையாக வரத்து வாய்க்கால்காள் தூர்வாரப்படாததையே காட்டுகின்றது என்கின்றனர்.

அதேபோல், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத வண்ணம் குண்டும், குழியுமாகவே சாலைகள் காட்சியளிப்பதால் பொதுமக்கள் மாநகராட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மழைக்காலம் துவங்கவிருக்கும் நிலையில் சாலைகளில் பயணிக்க முடியாமல் போகுமோ என்ற அச்சம் அனைத்து தரப்பினரிடமுமே எழுந்திருக்கின்றது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்படும் பள்ளங்கள் முறையாக, தரமானதாக மூடப்படாத நிலையில் ஆங்காங்கே பேருந்துகள், இலகுரக வாகனங்கள் சாலைகளில் சிக்கி மீட்க பல மணி நேரங்கள் ஆவதால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகின்றது.

publive-image

மொத்தத்தில் சொந்தக் கட்சிக்கார மாமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திருச்சி மாநகராட்சி தத்தளிக்கின்றது என்றே சொல்லலாம். கலகலப்பாக முடிந்த கூட்டத்தில் பெண் திமுக கவுன்சிலர்கள் 2 விதமான யூனிபார்மில் வந்தது அனைவரையும் உற்று நோக்க வைத்தது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக பெண் கவுன்சிலர்கள் ஒருவித நீல நிறத்திலான புடவையிலும், திருச்சி மத்திய மாவட்டத்திற்குட்பட்ட திமுக பெண் கவுன்சிலர்கள் பச்சை நிறத்திலான புடவையிலும் மாமன்றத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.

திருச்சி திமுகவில் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பொறுப்பு வகிக்கும் தெற்கு மாவட்டம் ஓங்கியிருக்கின்றதா, அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு வகிக்கும் மத்திய மாவட்ட ஓங்கியிருக்கின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் மாமன்ற கூட்டத்திற்கு வந்த பெண் கவுன்சிலர்கள் இருவேறு யூனிபார்ம்மோடு வந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.

க.சண்முகவடிவேல்

Tamilnadu Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment