பதிவுத்துறை டிஐஜி வாசுகி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நீதிமன்ற உத்தரவி மீறி செயல்பட்டதாக பதிவுத்துறை டி.ஐ.ஜி வாசுகி மீது சென்னைஉயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

பள்ளிக்கரணை பகுதி சதுப்பு நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்தது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை மீறி, சைதாப்பேட்டை இணை சார்பதிவாளரை இடமாற்றம் செய்த பதிவுத்துறை டி.ஐ.ஜி வாசுகி மீது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் ரூ.66 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது, கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் சதுப்பு நிலங்கள் பத்திரப்பதிவு செய்தாக 202 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, சதுப்பு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும் பள்ளிகரணை சதுப்பு நிலங்கள் பதிவு செய்தது குறித்து முழு விபரம் தெரிந்த, சைதாப்பேட்டை இணை சார்பதிவாளராக 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த சிவபிரியாவை பணிமாற்றம் செய்ய கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சார் இணைபதிவாளர் சிவபிரியாவை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்த பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., வாசுகி மீது நீதிமன்றம் தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.

மேலும், பள்ளிக்கரணை பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை, நீதிமன்ற கட்டுபாட்டில் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, பள்ளிக்கரணை செல்லும் கால்வாய்களில் உள்ள தடுப்புகளையும், ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை வீடியோ படமாக எடுத்து தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

அதேபோல் அந்த பகுதியை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய பொது பணித் துறைக்கும், ஆக்கிரமிப்பு பகுதியில் மின்சார வாரியம் எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக வருகிற 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தவிட்டார். மேலும், பெரும்பாக்கம் ஏரியில் நீர் போக்குவரத்து பாதையில் கட்டிட இடிபாடுகளை கொட்டி தடை ஏற்படுத்தி சட்டவிரோத சாலை அமைத்ததை அகற்றவும் உத்தரவிட்டார்.

பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பாகவும், அறிவியல் பூர்வமாக குப்பை அழிப்பது தொடர்பாக மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

மேலும், சதுப்பு நிலங்களை பாதுகாக்க மத்திய அரசு எடுக்க உள்ள நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு வழக்கறிஞர் பதிலளிக்கவும், சதுப்பு நிலங்களை பாதுகாக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close