குற்றாலம் ஜில் சீஸன்! அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை

குற்றாலம் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளும் பழைய குற்றாலம் நோக்கிப் படையெடுத்தனர். இதனால் அங்கு கூட்டம் எகிறியது.

குற்றாலத்தில் சீஸன் ஜில்லென களை கட்டியிருக்கிறது. அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலத்தில் உல்லாசப் பயணிகள் நீராடினர்.

குற்றாலம் சீஸன் தொடங்கியிருக்கிறது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை ஆரம்பித்தையொட்டி, கடந்த இரு தினங்களாக செங்கோட்டை, தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளில் சாரல் காணப்படுகிறது.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. நேற்று முன் தினம் (ஜூன் 7) மாலை முதல் சாரல் தொடர்ந்து இருந்து வருவதால், அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது. எனவே நேற்று காலை முதல் மெயின் அருவி, மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இன்று(ஜூன் 9) காலையிலும் தொடர்ந்து சாரல் இருந்து வருகிறது. சாரலுக்கு இடையே ஜில்லென தென்றல் காற்றும், இடையிடையே இள வெயிலும் சீஸனை ரம்மியமாக்குகின்றன. தொடர்ந்து சாரம் இருப்பதால் அருவிகளில் நீர் வரத்து அதிகமாகவே இருக்கிறது.

எனவே 2-வது நாளாக இன்றும் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதேசமயம் பிரதான அருவிகளில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் மிதமாக விழுகிறது.

எனவே விடுமுறை தினமான இன்று குற்றாலம் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளும் பழைய குற்றாலம் நோக்கிப் படையெடுத்தனர். இதனால் அங்கு கூட்டம் எகிறியது. ஆனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வசதியாக இருக்கிறது. நாளை (ஞாயிற்றுக் கிழமை) கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம்: நன்றி  Nature of Nellai

 

×Close
×Close