15 முறைகளுக்கு மேல் துவைத்து மீண்டும் பயன்படுத்தும் வகையிலான முக கவசத்தை, அண்ணா பல்கலைகழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க பெரும்பாலான மக்கள் முக கவசத்தை அதிகளவில் நாடி வருகின்றனர். முக கவசங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், சந்தையில் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலர் முக கவசங்களை அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதன்காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்நிலையில், முக கவசங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்க வகையிலான முக கவசங்கள் குறித்த ஆய்வில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் டெக்ஸ்டைல்ஸ் துறை களமிறங்கியது.
இந்த துறை மாணவர்கள், பேராசிரியர் எஸ். சுப்பிரமணியனின் தலைமையின் கீழ் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் பலனாக, மீண்டும் பயன்படுத்தக்க வகையிலும், அதேநிலையில் விலை குறைவானதுமான முக கவசங்களை உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் சுப்பிரமணியன் கூறியதாவது, பாலியஸ்டர் பைல் பேப்ரிக்கில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை உருவாக்கியுள்ளோம். இதன் விலை ரூ.30 மட்டுமே. இந்த முக கவசங்களை, 20 முறை அலசி மீண்டும் பயன்படுத்தலாம். பல்வேறு வகையான துணிகளை கொண்டு முக கவசங்களை உருவாக்க முயற்சித்தோம். இறுதியாக பாலியஸ்டர் பைல் பேப்ரிக் தேர்வானது. இது காற்றை நன்கு வடிகட்டி அனுப்புவதோடு மட்டுமல்லாது சுவாசித்தலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்ததாததையடுத்து இதனை தேர்வு செய்தோம்.
பருத்தி வகையிலான முக கவசங்களை துவைத்தால், ஈரத்தன்மை அதில் தொடர்ந்து இருக்கும். ஆனால், இந்த மெட்டீரியல் சீக்கிரம் காய்ந்து விடுவதால், சுவாசித்தலும் எளிதாக நடைபெறும்.
பாலியஸ்டர் பைல் பேப்ரிக் கடினமாக உள்ளபோதிலும், சுவாசித்தலுக்கு எவ்வித தடங்கலும் ஏற்படுத்துவதில்லை. எந்த வகையான சோப் கொண்டும் எளிதாக சுத்தப்படுத்தலாம் என்பது தனிச்சிறப்பு என்று அவர் கூறினார்.
சுப்பிரமணியன் தலைமையிலான குழு, சமீபத்தில் மாசு கட்டுப்பாட்டு முக கவசங்களை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Covid 19masks coronavirushealth departmentanna university