Advertisment

மத்திய அமைச்சர் இந்தியில் பதில்; சட்டவிதி மீறல் - சு.வெங்கடேசன் கடிதம்

மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் இந்தியில் பதில் அளித்திருப்பது சட்டவிதி மீறல் என்று சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி அறிவுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
cpm mp su venkatesan, madurai mp venkatesan, su venkatesan letter to central minister, சு வெங்கடேசன் எம்பி, மதுரை, மார்க்சிஸ்ட் கட்சி, தமிழக எம்பிக்களுக்கு இந்தியில் பதில் அளிப்பது சட்டவிதி மீறல், replying to tamil nadu mps in hindi against law, minister of state for home affairs, nithyananda rai, மத்திய அமைச்சர் நித்யானந்த ராய்

மதுரை எம்.பி சு.வெங்கடேசன், சி.ஆர்.பி.எஃப் துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்க கோரி ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பதில் கடிதம் இந்தியில் அனுப்பியிருப்பது சட்டவிதி மீறல் என்று சு.வெங்கடேசன் கடிதம் எழுடியுள்ளார்.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் மதுரை தொகுதி எம்.பி-யாக இருக்கிறார். இவர் அண்மையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்க்கு, சி.ஆர்.பி.எஃப் துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்க கோரி ஆங்கிலத்தில் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்துக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பதில் கடிதம் இந்தியில் அனுப்பியுள்ளார். தனக்கு இந்தி தெரியாது என்பதால், அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது தன்னால் அறிந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ள சு.வெங்கடேசன், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு பதில் அளிக்கும்போது, குறிப்பாக இந்தி பேசாத தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதில் அளிக்கும்போது மத்திய அரசு ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்ற சட்டம் மற்றும் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன், தமிழக எம்.பி-க்களுக்கு இந்தியில் பதிலளிப்பது சட்டவிதி மீறல் என்று கூறி மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “உங்களின் 09.11.2020 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அக் கடிதம் இந்தி மொழியில் இருந்ததால் அதன் உள்ளடக்கம் குறித்து என்னால் அறிய இயலவில்லை. இந்தி மொழியில் பதில் தந்ததன் மூலம், சட்டம் மற்றும் நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

நான் தங்களுக்கு 9-10-2020 அன்று சி.ஆர்.பி.எஃப் துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்க வேண்டுமென்று கோரி கடிதம் எழுதியிருந்தேன். தற்போது வந்துள்ள பதில் அக் கோரிக்கை குறித்ததாகவே இருக்கக்கூடுமென்று அனுமானிக்கிறேன்.

1963-ல் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அலுவல் மொழியாக இந்தி திணிக்கப்படாது என அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு உறுதியளித்தது தாங்கள் அறிந்ததே. இப் பிரச்சினை மீது எழுந்த நாடு தழுவிய விவாதத்தில் பிறந்த கருத்தொற்றுமையின் விளை பொருளே நேரு அவர்களின் உறுதி மொழி. பின்னர் 1965-ல் தமிழகத்தில் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பின் புலத்தில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களாலும் இதே உறுதி மொழி திரும்பவும் வழங்கப்பட்டது. 1967-ல் அலுவல் மொழிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் மூலம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களாலும் இது உறுதி செய்யப்பட்டது.

நான் இங்கு 1976 அலுவல் மொழி விதிகள் (இந்திய ஒன்றியத்தின் அலுவல் தேவைகளின் பயன்பாட்டிற்காக) - (1987, 2007, 2011 ஆண்டுகளில் திருத்தப்பட்டது) ஆவணத்தில் இருந்து சில பகுதிகளை சுட்டிக்காட்ட விழைகிறேன்.

"இந்த விதிகள், அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவல் பயன்பாட்டிற்குரியது) விதிகள் 1976 என்று அழைக்கப்படும். இவை இந்தியா முழுமைக்கும், தமிழ்நாடு மாநிலம் தவிர, பொருந்தும்"

இச்சட்ட விதிகள் மிகத் தெளிவாக தமிழ்நாடு மாநிலத்துக்கு ஒன்றிய அலுவல் மொழிச் சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுள்ளதை குறிப்பிடுகிறது.

மொழிப் பிரச்சினையில் தனது நிலையை அழுத்தமாக நிலை நிறுத்துவதில் தனித்துவமான இடம் தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேற்கூறிய விதி விலக்கு எங்கள் மாநிலத்திற்கு தரப்பட்டதும் அதன் வெளிப்பாடேயாகும்.

மேலும், அதே விதிகள், "சி" பிரிவில் குழுவாக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அலுவல் மொழிச் சட்டம் அமலாக்கப்ப்டுவது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. அதன் பொருத்தமான பகுதியைக் கீழே தந்துள்ளேன.

"சி" பிரிவில் இடம் பெற்றுள்ள பகுதியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான மற்றும் அம் மாநிலங்களைச் சேர்ந்த, அலுவலகங்கள் (மத்திய அரசு அலுவலகங்கள் அல்லாதவை), தனி நபர்களுக்கான மத்திய அரசு அலுவலகங்களின் கடிதப் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும்."

எனவே, இந்தியில் பதில் தருவதான உங்கள் அமைச்சரவையின் நடவடிக்கை இச் சட்ட விதிகளை அப்பட்டமாக மீறுவது ஆகும்.

நான் உங்கள் கவனத்திற்கு - மத்திய அரசு பணியாளர், பொது மக்கள் முறையீடுகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அலுவல் நிர்வாகப் பிரிவு (DOPT - அலுவலக சேவைப் பிரிவு) வெளியிட்ட "அரசு நிர்வாகத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்/ சட்ட மன்ற உறுப்பினர்களுக்குமான அலுவல் தொடர்புகள் - முறையான நடைமுறைகளைக் கடைப்பிடித்தல்" என்ற தலைப்பிலான எஃப்/எண் 11013/4/2018 - அலுவலக சேவை/ ஏ /III / 10.02.2020 தேதியிட்டது - அரசாணையைக் கொண்டு வர விழைகிறேன்.

இந்த அரசாணையின் இரண்டாவது பத்தி இதே பொருள் குறித்து இதற்கு முன்பாக அக்டோபர் 2012, நவம்பர் 2014, பிப்ரவரி 2018, அக்டோபர் 2018 ல் பல்வேறு தேதிகளில் வெளியிடப்பட்ட அரசாணைகளைக் குறிப்பிடுகிறது. மூன்றாவது பத்தி, மேற்கூறிய அரசாணைகள் கடைப்பிடிக்கப்படாமை குறித்து அத் துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட மீறல்கள் பற்றிப் பேசுகிறது. எதிர்காலத்தில் முறையான அமலாக்கத்தை உறுதி செய்ய மூல அரசாணையையும் அது இணைப்பாக தந்துள்ளது.

அந்த 01/12/2011 தேதியிட்ட மூல அரசாணை எண் 11013/4/2011 - அலுவல் சேவை (ஏ)- பிரிவு 5 (எக்ஸ்) ன் வரிகள் இவை.

"எப்பொதெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து ஆங்கிலத்தில் கடிதம் வரப்பெற்று அதற்கான பதிலை அலுவல் மொழிச் சட்டம் 1963-ன் அடிப்படையில், அதன் விதிகளின்படி, இந்தியில் தர வேண்டியிருந்தால், இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில், அதன் ஆங்கில மொழியாக்க வடிவமும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்"

அலுவல் மொழிச் சட்டத்தில் குறிப்பான விதி விலக்கைப் பெற்றுள்ள தமிழகத்திற்கு இதன் இந்தி மொழிப் பயன்பாடு குறித்த அம்சம் பொருந்தாவிட்டாலும் இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்திற்குமே நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து ஆங்கிலக் கடிதம் வரப்பெறும் பட்சத்தில் ஆங்கில மொழியாக்க வடிவம் அனுப்பப்பட வேண்டுமென்ற கட்டாயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உங்கள் அமைச்சகம் ஆங்கில மொழியாக்கம் இல்லாமல் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் பதில் அளிப்பது இந்த அண்மைய அரசாணையையும் மீறுவது ஆகும். இந்த அரசாணையே தொடர் மீறல்களை சரி செய்ய வெளியிடப்பட்டதே எனும் போது அதுவும் மீறப்படுகிறது.

முந்தைய பிரதமர்களால் வழங்கப்பட்ட உயர்வான உறுதிமொழிகள் இன்றைய ஆட்சியாளர்களாலும் மதிக்கப்பட வேண்டுமென்பது எனது ஆழமான உணர்வு. இருப்பினும் அரசாங்கமே சட்டங்களையும் நடைமுறைகளையும் திரும்பத் திரும்ப மீறுவது மனதை வருத்துவதாகும். ஆகவே, தமிழ்நாட்டிற்கு மொழிப் பிரச்சினையில் தரப்பட்ட தனித்துவமான உறுதி மொழியை மதித்து அதன் சட்ட ரீதியான அம்சங்களை அமலாக்குமாறு வேண்டுகிறேன்.

இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்கிற பன்மைத்துவ பண்பை பாதுகாக்கிற மேன்மையான வரலாற்றுப் பெருமிதம் உள்ள நாடாகும். அத்தகைய பார்வை அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்விலும் வெளிப்பட வேண்டும். இதுவே நாட்டின் ஒற்றுமையை, கூட்டாட்சி முறைமையை வலுப்படுத்துவதாய் அமையும்.

ஆகவே, உங்கள் அமைச்சக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களைத் தந்து தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களுக்கு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்தும் வந்தது போன்றே, ஆங்கிலத்திலேயே பதில் தருவதை உறுதி செய்யுமாறு வேண்டுகிறேன்.

உங்களின் விரைவான மறு மொழியை எதிர் நோக்கியுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Madurai Cpm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment