Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
CPM, G Ramakrishnan, Prakash Karat,Resolution

வி.பி. சிந்தன் நூற்றாண்டு விழா மற்றும் ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தை பாதுகாக்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், 2017 அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே. தங்கவேல் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் (24.10.17) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் - 1 தோழர் வி.பி. சிந்தன் நூற்றாண்டு

தோழர். வி.பி. சிந்தன் 1917 அக்டோபர் 10-ம் நாள் பிறந்தார். அவரது பிறந்த நாளின் நூறாவது ஆண்டு கடந்த அக்டோபர் 10-ம் நாள் துவங்கி விட்டது.

ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் மலபார் பகுதியில் பிறந்த அவர் பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தாலும், காந்தியாலும் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இயக்கத் தொண்டன் ஆனார்.

போராட்டக் களம் புகுதலும், சிறையேகுதலும், அடக்குமுறைகளுக்கு ஆளாகுதலும் அவரது இளமைக்கால வாழ்வாயிற்று. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய அவர் பின்னர் கம்யூனிஸ்ட் ஆன பிறகு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலைப் போரிலும், பாண்டிச்சேரியில் பங்கேற்றார். உயிரைப் பணயம் வைத்த அவரது போராட்ட வாழ்க்கை இறுதி மூச்சு வரை தொடர்ந்தது.

கேரளப் பகுதியில் இருந்து தமிழகப் பகுதிக்கு கட்சிப் பணிக்காக அனுப்பப்பட்ட அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியைத் துவக்கினார். விவசாயிகள் சங்கத்தைக் கட்டுவது, கட்சி அமைப்பை உருவாக்கி கட்டமைப்பது, தோழர்களுக்கு வர்க்க அரசியலைப் போதிப்பது போன்றவற்றில் அவர் தீவிரமாக செயல்பட்டார்.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அவரது ஆரம்பகால இயக்க வேலைகள் தனித்துவமானது.

கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவராக பரிணமித்தார். தீக்கதிர் வார இதழின் முன்னோடியாக இருந்தார்.

சென்னையிலிருந்து அரசியல் பணியையும், தொழிற்சங்கப் பணியையும் மேற்கொள்ளுமாறு கட்சி எடுத்த முடிவின்படி சென்னை அவரது பிரதான களமாயிற்று.

சென்னையில் இருந்த பெரும் தொழிற்சாலைகளில் சீர்திருத்த தலைமைகளுக்கு எதிராகவும், தொழிற்சங்க ஜனநாயகத்திற்காகவுமான போராட்டம் வீரியமாய் வெடித்தது. தொழிற்சங்க இயக்கத்தில் கூட்டுப் போராட்டம், ஆதரவுப் போராட்டம், தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாக அரசியல் இயக்கங்களின் ஆதரவுப் போராட்டம் என தொழிற்சங்க இயக்கத்திற்கு புதுப்பரிமாணத்தை கொடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது.

போக்குவரத்து, மின்சாரம், துறைமுகம், ரயில்வே, பாதுகாப்புத்துறை போன்ற கேந்திரமான தொழில்களில் வலுவான சங்கங்களை உருவாக்கியதில் அவரது அயராத பணி குறிப்பிடத்தக்கது.

1967-க்குப் பிறகு 10 ஆண்டுகள் கடுமையான அடக்குமுறைக்கும், தடியடிக்கும், ரவுடித் தாக்குதலுக்கும், கத்திக்குத்திற்கும்,கைது நடவடிக்கைகளுக்கும் ஆளானார்.

அவசர காலத்தின் போது தலைமறைவாக மிகுந்த திறமையோடு வழக்கமான தொழிற்சங்கப் பணியையும் வழிகாட்டலையும் மேற்கொண்டார்.

கட்சி வட்டாரத்திற்கு அப்பால் விரிந்த நட்பு வட்டாரம் அவருக்கு உண்டு. அவரது அணுகுமுறையும், எல்லாப் பொருள் மீதும் அவருக்கு இருந்த மேதாவிலாசமும், எளிமையும், நேர்மையும் மிகுந்த ஈர்ப்பு விசையை அவருக்கு கொடுத்தது. ஏராளமான இளைஞர்களை, நடுத்தர வர்க்கத்து கல்வியாளர்களை அவர் கட்சியின் பால் ஈர்த்தார்.

இடதுசாரி அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் எல்லாத் தளத்திலும் அவர் முத்திரை பதித்தவர். சிறந்த பேச்சாளர், நல்ல எழுத்தாளர், தத்துவ போதகர், கட்சிக் கல்விக்கான ஆசிரியர், நல்ல இலக்கியவாதி, விமர்சகர் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு உறுதியான போராளி.

அவரது நூற்றாண்டை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவது என தமிழ்மாநிலக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, வகுப்புவாத எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, தொழிற்சங்க உரிமை, தொழிலாளி - விவசாயி ஒற்றுமை, பெண்ணுரிமை போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள், கூட்டங்கள், பிரசுரங்கள், கலைப்படைப்புகள் போன்ற வடிவங்களில் இவ்விழாவை முன்னெடுக்க கட்சி அமைப்புகளையும், வெகுஜன அமைப்புகளையும் கட்சியின் மாநிலக்குழு பணிக்கிறது.

தீர்மானம் -2: ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தை பாதுகாக்க கோருதல்

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தைச் சார்ந்து சுமார் 5000 பேர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆற்றில் நீர்வரத்து அதிகம் வரும் போதும், குறையும் போதும் படகு சவாரி நிறுத்தப்படுவதால் தொழிலாளிகளின் வேலையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றன. இக்காலத்தில் தொழிலாளிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதார தொழிலை பாதுகாத்து மீன்பிடித்தல், உணவு சமைத்தல் உள்ளிட்ட தொழில்களை மேம்படுத்தவும், காவல்துறையின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தவும், ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cpm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment