Advertisment

நீட் விலக்கு கோரி போராடிய மாணவர்களை சிறையில் அடைப்பதா? மார்க்சிஸ்ட் கண்டனம்

நீட் தேர்விற்கு விலக்கு கோரி போராடிய மாணவர்களை சிறையிலடைப்பதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
cpm, communist party of india (marxist), SFI, g.ramakrishnan, NEET protest

நீட் தேர்விற்கு விலக்கு கோரி போராடிய மாணவர்களை சிறையிலடைப்பதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்களிப்பது, கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவது, மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இதனை சகித்துக் கொள்ள முடியாத அஇஅதிமுக அரசு மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க முனைகிறது. கோரிக்கைகளின் நியாயத்தை உணராத மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க முனைகிறது.

நேற்றைய தினம் (09.09.2017) சென்னையில் சில இடங்களில் குறிப்பாக நுங்கம்பாக்கம், பெரம்பூர் பகுதிகளில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவர் - மாணவிகள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களை சென்னை மாநகர காவல்துறை சட்டத்திற்கு புறம்பாக மாணவர் - மாணவிகளை பள்ளியை விட்டு வெளியேற்றிவிடுவதாகவும், தேர்வு எழுத விட மாட்டோம் என்றும் மிரட்டி - அச்சுறுத்தி அப்புறப்படுத்தியுள்ளனர்.

காவல்துறையின் கெடுபிடி, தள்ளுமுள்ளு தாக்கத்தால் சில மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர். மாணவிகளின் ஆடைகளை பிடித்து இழுத்து தள்ளியுள்ளனர். 14 மாணவர்களையும், இந்திய மாணவர் சங்கத் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்டு தமிழகத்தின் இதர பகுதிகளிலும் மாணவர் - வாலிபர் சங்கத் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத அத்துமீறல் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சமகல்வியும், சமவாய்ப்பும் இல்லாத சூழலில் தகுதி தேர்வு என்ற பெயரால் அடித்தட்டு மக்கள் மற்றும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை சிதைக்கும் மத்திய அரசின் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக அஇஅதிமுக அரசு, மத்திய பாஜக அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு துணை நிற்பது தமிழக மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகச் செயலாகும் - சமூக நீதியையும், தமிழகத்தின் இடஒதுக்கீட்டு நடைமுறையையும் முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையாகும்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களையும், மாணவர், வாலிபர் சங்கத் தலைவர்களையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

Cpm G Ramakrishnan Sfi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment