scorecardresearch

புதுச்சேரியில் கொலை, கொள்ளை அதிகரிப்பு: சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ புகார்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புதுச்சேரி போலீஸ் மீது பொது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக எம்எல்ஏ-மான சிவா புகார் தெரிவித்தார்.

Puducherry
Puducherry

புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர், நிதியமைச்சருமான ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (மார்ச் 20) பூஜ்ஜிய நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், தி.மு.க எம்.எல்.ஏ-வான இரா. சிவா, புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரி கிராம பகுதியான தவளக்குப்பம் காவல் நிலைய எல்லையில் 15 பவுன் நகை, ரொக்கப்பணம், அரியாங்குப்பத்தில் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பொறையூர் சாலையில் உள்ள வள்ளுவன்பேட் பகுதியில் 20 தங்க நாணயங்கள் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ரெயின்போ நகரில் கருணாநிதி என்பவரது வீட்டுக்குள் நுழைந்த மூன்று மர்ம நபர்கள் கத்தி முனையில் 35 லட்சம் ரூபாய் மற்றும் 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து பெரிய கடை போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

முதலியார்பேட்டையில் பிரஞெ்சு குடியுரிமை பெற்றவர் வீட்டில் கொள்ளைபோன பொருட்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதிகளிலும் கொள்ளை முயற்சி நடந்தேறிவுள்ளது. இது தொடர்பான செய்திகள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வந்துள்ளன. ஆனால் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை, இதுவரை போலீசார் கைது செய்யவில்லை.

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், கொள்ளையர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றுவது சிசிடிவி காட்சியில் தெரிய வந்துள்ளது. இப்படி இருக்கும் போது இரவு நேரத்தில் கொள்ளையர்கள் காவலாளிகள், பொதுமக்களை தாக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள், பொதுமக்கள் பீதி கலந்த அச்சத்தில் உள்ளனர்.

இச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை ஏன் காவல்துறை பிடிக்கவில்லை? எதற்காக காலதாமதம்? எனவே குற்றவாளிகளை விரைந்து கைது செய்து மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Crime cases increased in puducherry opposition slams government