Cure therapy ban to training for police : பாலியல் தேர்வு என்பது தனியுரிமைக்கான இன்றியமையாத அம்சமாகும் என்பதை அடிகோடிட்டு காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், பாலியல் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளை பிரதானமாக கொண்டுவர முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில் பாலியல் சிறுபான்மையினரை மருத்துவ ரீதியாக குணப்படுத்த முயல்வதை தடை செய்வது முதல் பள்ளிகளில் மாற்றங்களை கொண்டு வருதல் மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரிகள், காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்குதல் போன்றவை இடம் பெற்றுள்ளது.
மதுரையில் தன்பால் ஈர்ப்பின ஜோடி தங்கள் பெற்றோர்களின் எதிர்ப்பை சமாளிக்க சென்னையில் குடியேறியனர். அவர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறிய பிறகு, பெற்றோர்கள் அவ்விரு நபர்களையும் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்தனர். இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அந்த ஜோடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, காவல்துறையினரின் துன்புறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பு வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர் அந்த ஜோடி.
பாலியல் சிறுபான்மையினர் ( LGBTQIA+ ) தங்களின் தனிப்பட்ட வாழ்வை வாழ தகுதி உடையவர்கள். அதில் அவர்கள் பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு தேர்வுகளுடன் கூடிய கண்ணியமான வாழ்கையை வழிநடத்த அவர்களுக்கு உரிமையுண்டு. அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் அவர்களின் இந்த உரிமை பாதுகாக்கப்படுகிறது.
பாலின சிறுபான்மையினரின் நோக்கு நிலையை ( sexual orientation) மருத்துவ ரீதியாக குணப்படுத்த முயலுதல் அல்லது மாற்றுவதற்கு முயற்சிப்பது, திருநங்கைகள்/நம்பிகளின் பாலின அடையாளத்தை சிஸ்ஜெண்டருக்கு மாற்ற முயற்சிப்பதை தடை செய்து அறிவித்துள்ளது தமிழ் நாடு. கன்வெர்ஷன் தெரப்பி என்று கூறப்படும் பாலின நோக்கு நிலைகளை மாற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கும், மத சடங்கு முறைகளுக்கும் தடை விதித்த முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. உத்தரவு பிறப்பிக்கும் போது, கன்வெர்ஷன் தெரப்பியில் ஈடுபடும் எந்த ஒரு மருத்துவ பணியாளர்களின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
“தன்பால் ஈர்ப்பு குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாத பெரும்பான்மை சாமானிய மனிதர்களில் நானும் ஒருவன் என்று ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கும் இல்லை. அறியாமை என்பது எந்த ஒரு பாகுபாட்டையும் இயல்பாக்குவதற்கு நியாயமான காரணி அல்ல. எனவே, நான் ஓரினச்சேர்க்கை மற்றும் வழிகாட்டுதலில் எனது அறியாமை தலையிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன். தனிப்பட்ட முன்கருத்துகளை குறைத்தும், குறைந்தபட்சம் நான் பாலியல் சிறுபான்மையினர் குறித்து அறிந்து கொள்வதற்காகவும், அவர்களுக்கான நீதியை அனைத்து வடிவங்களிலும் வழங்குவதற்கான பொறுப்பான கடமையை ஏற்றுக் கொண்டேன்” என்று நீதிபதி வெங்கடேஷ் கூறினார்.
காணாமல் போனவர்கள் பற்றி எந்த ஒரு புகாரையும் விசாரிக்கும் போது, இந்த வழக்கில் பாலியல் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிந்தால் அவர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் புகாரை காவல்துறை முடிக்கலாம் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களில், LGBTQIA + சமூகம் மற்றும் பாலின உறுதிசெய்யப்படாத (gender nonconforming) மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து பெற்றோர்கள் அறிந்து கொள்ள பெற்றோர்கள் ஆசிரியர்கள் கூட்டத்தை பயன்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்து துறைகளிலும் பாலின சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்க்க கொள்கைகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; பாலின-நடுநிலை ஓய்வறைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். திருநங்கைகளுக்கான கல்வி பதிவுகளில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுவதற்கான விருப்பம்; விண்ணப்ப படிவங்கள், போட்டி நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றின் பாலின நெடுவரிசைகளில் எம் (Male) மற்றும் எஃப் (Female) உடன் கூடுதலாக ‘திருநங்கைகள்’ சேர்க்கப்பட வேண்டும். LGBTQIA + உள்ளடக்கிய ஆலோசகர்களை நியமித்தல், நீதித்துறை அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல் மற்றும் LGBTQIA + சமூகத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கான திட்டங்களை தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம். முன்னதாக ஏப்ரல் 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், இன்டர்செக்ஸ் குழந்தைகளுக்கு கட்டாய பாலியல் தேர்வு அறுவை சிகிச்சை நடத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil