சைபர் கிரைம் புகார்களை கையாள்வது எப்படி? குற்றப்பிரிவு டிஎஸ்பி விளக்கமளிக்க உத்தரவு!

மனுவில் கூறியுள்ள கோரிக்கை மிகவும் ஆபத்தானது

சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களை கையாள்வது குறித்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலை தளங்கள் மூலமாக தனிநபர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில், பேஸ்புக், ட்விட்டர், ஜி மெயில் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களையும் ஆதாருடன் இணைப்பதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் ரூபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அவதூறான பதிவுகளை பதிவு செய்பவர்கள் குறித்த விவரங்களை வழங்கும்படி கேட்டால் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள், வழங்க மறுப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, மனுவில் கூறியுள்ள கோரிக்கை மிகவும் ஆபத்தானது எனவும், தனிநபர்களின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது என்றும் இந்த கோரிக்கையை எழுப்ப மனுதாரருக்கு என்ன உரிமை உள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவல் துறையில் புகார் அளித்தாலே தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டவரும் தண்டிக்கப்பட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும் ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆகஸ்ட் 20க்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களை கையாள்வது குறித்து ஆகஸ்ட் 20 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கும் உத்தரவிட்டனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close