கன்னியாகுமரியில் ‘ஓகி’ துயரம் : 3-வது போராட்டம், தேங்காப்பட்டணத்தில் மீனவர்கள் பேரணி

கன்னியாகுமரியில் ஓகி துயரம் ஓயவில்லை. மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி 2-வது நாளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் பேரணி-மறியல் நடத்தினர்.

கன்னியாகுமரியில் ஓகி துயரம் ஓயவில்லை. மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி 2-வது நாளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் பேரணி-மறியல் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்த 30-ம் தேதி ஓகி புயல் கடுமையாக தாக்கியது. இங்கு வாழைகள், ரப்பர் மரங்கள் உள்ளிட்ட வாழ்க்கை ஆதாரங்கள் முற்றிலும் சேதமடைந்தன. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான கன்னியாகுமரி, கேரள மீனவர்கள் நடுக்கடலில் ஓகி புயலில் சிக்கினர்.

கன்னியாகுமரி மற்றும் கேரள மீனவர்களை மீட்க இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை, இந்திய விமானப் படை ஆகியவை களம் இறங்கின. ஆனாலும் இன்னும் நடுக்கடலில் மாயமான மீனவர்கள் முழுமையாக மீட்கப்படவில்லை. அவர்களை மீட்க வலியுறுத்தி நேற்று (7-ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், சின்னத்துறை பகுதியை சேர்ந்த 8 கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் குழித்துறை ரயில் நிலையத்திற்கு திரண்டு வந்து மறியல் செய்தனர்.

நள்ளிரவு 12 மணி வரை மொத்தம் 12 மணி நேரம் அந்த மறியல் நீடித்தது. ஓகியில் பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் ரூபாய் நிதி உதவி உள்ளிட்ட சில அறிவிப்புகளை இரவில் முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி வெளியிட்டார். அதன்பிறகே குழித்துறை ரயில் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தவிர, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக வந்து மக்களை சந்திப்பார் என அதிகாரிகள் கூறிய வாக்குறுதியை நம்பியும் மக்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று (8-ம் தேதி) 2-வது நாளாக கன்னியாகுமரியில் போராட்டம் வெடித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் அடர்த்தியாக வசிக்கும் மற்றொரு முக்கிய பகுதியான குளச்சலில் இன்று காலை பல்லாயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களுமாக மீனவர்கள் திரண்டு பேரணி மற்றும் மறியல் நடத்தினர். ஓகியில் காணாமல் போன மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், கடலில் பலியான 13 மீனவர்களின் உடல்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கை! இந்தப் போராட்டத்தில் Live Updates

மாலை 4.30 : தேங்காப்பட்டணம் என்பது, தூத்தூருக்கும் குளச்சலுக்கும் இடைப்பட்ட ஏரியா! முதல் இரு போராட்டங்களிலும் பங்கேற்காத மீனவ கிராமங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டன. ஓகியில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வாசகங்களையும் இவர்கள் வைத்திருந்தனர்.

மாலை 4.00 : குளச்சல் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு கடற்கரைப் பகுதியான தேங்காப்பட்டணத்தில் திடீரென மீனவர்கள் திரண்டு பேரணி நடத்தினர். இவர்களும் ஏற்கனவே நடந்த இரு போராட்டங்களில் முன்வைத்த கோரிக்கைகளையே வலியுறுத்தினர்.

பிற்பகல் 3.00 : அரசு தரப்பின் அறிவிப்புகள், மீனவர்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பாதிரியார்களை தொடர்புகொண்டு அதிகாரிகள் பேசினர். இதை ஏற்று மாலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பகல் 12.30 : கேரள அரசு முயற்சியால்தான் இந்த அளவிலாவது கடலில் தேடும் பணி நடக்கிறது என்றும், தமிழக அரசு இதில் எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டினர். மீண்டும் குமரி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பகல் 12.15 : கன்னியாகுமரி மீனவர்களுக்கு ஆதரவாக கோயம்புத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பகல் 12.00 : குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து போராட்டத்தில் ஒரு தரப்பினர் குளச்சலின் முக்கிய இன்னொரு சந்திப்பான அண்ணா சிலை பகுதிக்கு சென்றனர். போலீஸார் அங்கு தடுப்பு வேலிகளை வைத்து தடுத்தனர். ஆனால் மீனவர்கள் தடுப்பு வேலிகளை அகற்றிக்கொண்டு அங்கு குவிந்தனர்.

பகல் 11.45 : கன்னியாகுமரி மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்கள் திரள இருப்பதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. அங்கு கூட்டமாக வந்த இளைஞர்களை உடனுக்குடன் அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.

பகல் 11.30 : போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் கூறுகையில், ‘ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, தமிழக அரசுக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தேவையா? அந்த விழாவுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் அரசு, ஓகி புயலுக்கு 25 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தது. தமிழக முதல்வரோ, எங்கள் எம்.பி.யோ (மத்திய அமைச்சர் பொன்னார்) எங்களை வந்து பார்க்கவில்லை’ என்றார்கள்.

பகல் 11.00 : குளச்சல் கடற்கரையில் இருந்து பல்லாயிரக்கணக்கில் மக்கள் பேரணியாக திரண்டு வந்து, குளச்சல் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 

×Close
×Close