நான் சொல்வதை அதிகாரிகள் கேட்க வேண்டும். இல்லை என்றால் கலெக்டரையே மாற்றி விடுவேன் என்று கூறிய, தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ள பொதுச்செயலாளர் துரைமுருகன், புதிய நிர்வாகியையும் அறிவித்துள்ளார்.
தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டவர் தர்மசெல்வன். இவர் கட்சி நிர்வாகி மற்றும் தொண்டர்களுடன், ஆலோசனை நடத்தியபோது, நான் சொல்வதை அதிகாரிகள் கேட்க வேண்டும். இல்லை என்றால் கலெக்டரையே மாற்றிவிடுவேன் என்று பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு தொடர்பான ஆடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், உள்ளிட்ட பலரும் தி.மு.க மாவட்ட பொறுப்பாளரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தர்மசெல்வன் குறுநில மன்னர் போல் செயல்படுவதாகவும், அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். இந்த கண்டனங்கள் குறித்து அறிந்துகொண்ட, தர்மசெல்வன், தான் பேசியது தவறுதான் என்று கூறி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
தர்மசெல்வனின் வருத்தத்தை ஏற்க மறுத்த கட்சியின் பொதுச்செயலார் துரைமுருகன், தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து தர்மசெல்வன் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ.மணி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தடங்கம் சுப்ரமணியம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 23-ந் தேதி அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு தர்மசெல்வனுக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. ஆனால் பதவி கிடைத்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தனது பேச்சின் காரணமாக தர்மசெல்வன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது புதிய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.பி. ஆ.மணி என்பவர், தர்மபுரி தொகுதியின் தி.மு.க எம்.பியாக இருக்கிறார். கடந்த தேர்தலில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி, சௌமியா அன்புமணிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.