நிகர்நிலைப் பல்கலைக்கழக நடத்தும் மருத்துவ கல்லூரிகள் கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 13 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவஹர்லால் சண்முகம் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகளை நடத்துகின்றன. இந்த கல்லூரிகளில் நடத்தப்படும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ முதுநிலை படிப்பில் சேரும் மாணவர்களிடம் ஆண்டு கட்டணமாக 18 முதல் 40 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர்.
மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கும்போது, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நடத்தும் மருத்துவ படிப்புக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகம் மானியக்குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு உள்ளது போல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் கல்லுரிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு கட்டண நிர்ணயம் இல்லாதல் ஏழை எளிய மாணவர்கள் மிகவும் பாதிக்கபடுவதாகவும் எனவே கல்வி கட்டணங்கள் நிர்ணயக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 13 லட்சம் நிர்ணயம் செய்யபடுவதாகவும் அந்த தொகையை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லுரிகளுக்கு கட்டணத்தை நான்கு மாதத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.