Advertisment

ஜெயலலிதா சொத்துக்களை கைப்பற்றவே அம்ருதா வழக்கு: தீபா பதில் மனு

ஜெயலலிதாவின் சொத்துகளை கைப்பற்றவே அம்ருதா பொய்யான வழக்குத் தொடர்ந்துள்ளார் என உயர் நீதிமன்றத்தில் தீபா பதில் மனு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெயலலிதா சொத்துக்களை கைப்பற்றவே அம்ருதா வழக்கு: தீபா பதில் மனு

ஜெயலலிதாவின் சொத்துகளை கைப்பற்றவே அம்ருதா பொய்யான வழக்குத் தொடர்ந்துள்ளார் என உயர் நீதிமன்றத்தில் தீபா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், தனது அம்மா ஜெயலலிதா என்று உரிமை கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது, அம்ருதாவை கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், ஜெயலலிதா வாழ்ந்தது, அவர் உடல் புதைக்கப்பட்டது எல்லாம் தமிழ்நாடு என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாட அனுமதி கோரப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதித்தது.

இதையடுத்து, அம்ருதா உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'நான் ஜெயலலிதாவின் மகள் என்பது கடந்த ஆண்டு (2017) மார்ச் மாதம் தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவை என் பெரியம்மா என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தான் என் தாயார் என்று உறவினர்கள் கூறினர்.

கடந்த 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம்தேதி ஜெயலலிதாவின் மகளாக பெங்களூருவில் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். எனக்கு அம்ருதா என்று பெயர் சூட்டினார்கள். என்னை உறவினர்கள் செல்லமாக மஞ்சுளா என்றும் அழைப்பார்கள். 3 மாத குழந்தையாக இருந்த போதே ஜெயலலிதாவின் தாயார் சந்தியா என்னை தற்போது வளர்ந்துவரும் தாயார் சைலஜாவிடம் என்னை தத்து கொடுத்து விட்டார்.

எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி, யாருக்கும் தெரியாமல் மறைத்து வளர்த்தனர். சைலஜாதான் என் தாயார் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். இதற்கு முன்பு எனது தாயார் சைலஜா பல அ.தி.மு.க. பிரமுகர்களை சந்தித்து, தான் ஜெயலலிதாவின் தங்கை என்று அவர்களிடம் கூறி இருக்கிறார். ஆனால் யாரும் நம்பவில்லை.

என்னை வளர்த்த தந்தை சாரதியும், கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார். நான் ஜெயலலிதா மகள் என்பதை அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, பெங்களூருவில் உள்ள இன்னொரு உறவினர் லலிதா ஆகியோர் உறுதிப்படுத்தி விட்டனர். ஜெயலலிதா தான் என் தாய் என்பதை நிரூபிக்கவே டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் . நான் ஜெயலலிதாவின் மகள் என்பது தற்போது துணை முதல்- அமைச்சராக உள்ள ஒ. பன்னீர் செல்வத்துக்கும் தெரியும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, போயஸ் கார்டன் வீட்டில் பல முறை அவரை சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர் என்னை ஆரத்தழுவி தாய் ஸ்தானத்தில் இருந்து முத்தம் கொடுப்பார். இங்கிருந்து நீ சென்று விடு, நீ உயிரோடு இருந்தால் போதும் என்று அவர் பல முறை என்னிடம் கூறினார். இப்போதுதான் அவர் என் தாய் என்பதை அவர் இல்லாத போது உணருகிறேன்.

ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருந்தவரை அவர் தான் என் தாய் என்று நான் கூறவில்லை. இப்போது தான் அவர் என் தாய் என்பதை பகிரங்கமாக கூறுகிறேன்.

2016 ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்த என் தாயார் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலை தோண்டி எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மகள் என்ற முறையில், வைணவ முறைப்படியும், எங்களின் குடும்ப வழக்கபடியிம் இறுதி சடங்கு செய்ய எனக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி, கடந்த ஆண்டு (2017) டிசம்பர் 10 ஆம் தேதி தமிழக தலைமை செயலாளர், சென்னை போலீஸ் கமிசனர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, நான் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் ' என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது. அம்ருதா மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு, தீபக், தீபா ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தீபா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘‘எனது அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்தே அம்ருதா அவரது மகள் எனக்கூறி பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார். எனது பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். இது ஒரு பொய் வழக்கு என்றும் அம்ருதா மோசடி பேர்வழி என்றும் எனவே அம்ருதாவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளார்.

ஏற்கனவே தீபக் கடந்த 1 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்தார். தீபா தெரிவித்துள்ள அதே கருத்தே தீபக்கும் தனது பதில் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment