Advertisment

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 23 பேர் பலி : அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 23 பேர் பலியாகி இருப்பதாக முதல்வரின் ஆலோசனைக்கு பிறகு அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
dengue fever in tamilnadu, dengue toll rises to 23 in tamilnadu, cm edappadi palaniswami meeting to control dengue

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 23 பேர் பலியாகி இருப்பதாக முதல்வரின் ஆலோசனைக்கு பிறகு அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம், முன்பு எப்போதையும்விட அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்பை 100 சதவிகிதம் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகள், அரசு தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் வியாழன்று கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு டெங்குவை பரப்பும் கொசுவை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி தீர்வு காண வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. ரத்த பரிசோதனைகள் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக 40 வினாடிகளில் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் எந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

காய்ச்சல் நேரத்தில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. காய்ச்சலை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள அரசு சார்பில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

பொதுமக்கள் முற்றிலும் இலவசமாக அரசு மருத்துவமனைகளை எளிதில் அணுகி சிகிச்சைகளை பெறலாம். தமிழகம் முழுவதும் உள்ள 303 அரசு மருத்துவமனைகளுக்கு 837 ரத்த பரிசோதனை கருவிகள் ரூ.23 கோடியே 50 லட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு டெங்கு பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அவர் நாள் ஒன்றுக்கு 2 முறை ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ரத்த பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவு செலவு நேரிடும். ஆனால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் 24 மணி நேரம் செயல்படும் காய்ச்சல் சிகிச்சை மையத்தை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். காலை 8.30 மணி முதல் மாநாகராட்சி சார்பில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படும். வியாழக்கிழமை தோறும் டெங்கு எதிர்ப்பு தினம் பெயரில் பள்ளிகளில் தூய்மை திட்டம் மேற்கொள்ளப்படும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தட்டணுக்களை கண்டறிய சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

காய்ச்சல் வந்த உடனே தனியார் மருத்துவர், சுய மருத்துவத்தை பார்க்காமல் அரசுமருத்துவமனைக்கு வரவேண்டும்.ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்படும். டெங்கு காய்ச்சல் குறித்து குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரெ,

தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குநர் ப.உமாநாத், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் பாஸ்கரன், பேரூராட்சிகள் துறை இயக்குநர் பழனிசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் துறை இயக்குநர் பானு, மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (இ.எஸ்.ஐ) துறை இயக்குநர் இன்பசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Minister Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment