Advertisment

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதியாக குறைந்திருக்கிறது : அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் டெங்கு இறங்கு முகமாக உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதியாக குறைந்திருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu today news live updates

Tamil Nadu today news live updates

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் டெங்கு இறங்கு முகமாக உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதியாக குறைந்திருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

Advertisment

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (அக்டோபர் 22) ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

‘இங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே 240 பேர் என்ற அளவில் இருந்தது. அது இப்போது 200 பேர் என்ற அளவில் குறைந்திருக்கிறது. கடந்த மாதத்தில் டெங்கு பாசிட்டிவ் 40 பேர் என்ற எண்ணிக்கையில் இருந்து இப்போது 20 பேர் என்ற எண்ணிக்கையில் பாதியாக குறைந்திருக்கிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்து எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு மக்கள் வருகிறார்கள். பொது மக்களுக்கு எங்கள் அன்பான, அழுத்தமான வேண்டுகோள் என்னவென்றால் காய்ச்சல் வந்தவுடன் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். அதை கவனக்குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தாமதப்படுத்த வேண்டாம். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். அல்லது அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லலாம்.

காய்ச்சல் வந்த 3 வயது குழந்தைக்கு பாட்டி வைத்தியம் என்ற பெயரில் ஒரு விதையை உரசி நெற்றி, நெஞ்சு பகுதியில் சூடு வைத்து 10 நாட்களாக காய்ச்சல் குறையாததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் சுய மருத்துவம் கூடாது. மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது. பாட்டி வைத்தியம் செய்து கொள்ளக் கூடாது.

போலி மருத்துவர்களை கைது செய்யும் பணியில் அரசு கவனம் செலுத்துகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்பின் போது முதல் 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும். 3, 4, 5-வது நாட்களில் காய்ச்சல் இருக்காது. குழந்தை நன்றாக இருக்கும். அதனால் அந்த குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதோ வேறு பணிக்கு அனுப்புவதோ கூடாது. ஏனென்றால் மீண்டும் ஒருமுறை காய்ச்சல் வரும்.

குழந்தையாக இருந்தால் 7 நாள், பெரியவர்களாக இருந்தால் 5 நாள் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருந்து காய்ச்சல் முற்றிலும் குணமாகி விட்டது என்று மருத்துவர் உறுதிபடுத்தியபிறகு தான் அவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அதற்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

டெங்குவை ஒழிக்க மாவட்ட கலெக்டர்கள் களத்தில் இறங்கி முழு வீச்சில் ஈடுபடுகிறார்கள். இப்போது காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது. முதல் அமைச்சர் அனைத்து துறைகளை உள்ளடக்கிய ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

பள்ளிக் கல்வித் துறையினர் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முதலில் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பின்னர் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் அவர்களின் வீடு மற்றும் வீட்டு சுற்றுப் புறத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

திருவண்ணாமலையில் ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவியிடம் கேட்டபோது விழிப்புணர்வு தகவல்களை சரியாக சொல்லாததால் அந்த பள்ளி சரியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை என்று எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அனைத்து அரசு, தனியார் பள்ளிகளும் பொது சுகாதாரத்துறையின் வேண்டுகோளை ஏற்று உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அரசின் உத்தரவு.

டெங்குவுக்காக மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். அவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். எதையுமே எதிர்பார்க்காமல் மாநில அரசு தொடர்ந்து தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக நர்சுகள், லேப் டெக்னீசியன்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று உத்தரவு வழங்கி யுள்ளோம்.

டெங்குவுக்காக ரூ.10 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று துணை இயக்குனர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை முதல்வர்களும் வேண்டிய உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே எந்த சுணக்கமும் இல்லாமல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் டெங்கு இறங்கு முகமாக உள்ளது. மதுரை, திருச்சி மாவட்டத்தில் 100 சதவீதம் இந்த வாரம் கட்டுக்குள் கொண்டுவரப்படும். டெங்கு என்பது குணப்படுத்தக் கூடிய நோய்தான். ஆனால் உரிய நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார, ஒன்றிய அளவில் கோட்டாட்சியர் தலைமையில் டெங்குவை ஒழிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் தீவிர டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன’. இவ்வாறு அவர் கூறினார்.

 

Minister C Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment