வங்கக்கடலில் இன்று (டிச.15) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும்.
அதேநேரம், தெற்கு அந்தமான் கடல் பகுதி, அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (டிச.15) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் 20-ம் தேதி வரை மழை நீடிக்கும்.
இன்று (டிச.15) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாளை (டிச.16) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் ராமநாதபுரம். புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் கடனாநதி அணை -யில் 26 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 23 செ.மீ., நாலுமுக்கில் 22 செ.மீ., தூத்துக்குடி விமான நிலையத்தில் 21 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் 19 செ.மீ., மாஞ்சோலையில் 18 செ.மீ., தூத்துக்குடியில் 16 செ.மீ., தென்காசி மாவட்டம் ராமநதி அணை, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“