‘ஓகி’ நிவாரணத்திற்கு வந்த ஓபிஎஸ்-ஸுக்கு இது தெரியுமா? எஸ்கார்ட் வாகனம் பறித்த ஏழை வியாபாரியின் உயிர்

ஓகி புயல் பாதிப்பின் சோகத்தில் இருந்து மீளாத கன்னியாகுமரியில் நடந்த இன்னொரு சோகம் இது! ஓபிஎஸ்-ஸின் பாதுகாப்பு வாகனம் ஒரு உயிரை பறித்தது.

ஓகி புயல் பாதிப்பின் சோகத்தில் இருந்து மீளாத கன்னியாகுமரியில் நடந்த இன்னொரு சோகம் இது! ஓபிஎஸ்-ஸின் பாதுகாப்பு வாகனம் ஒரு உயிரை பறித்தது.

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் நிவாரண பணிகளை முடுக்கி விடுவதற்காக கடந்த 3-ம் தேதி தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு சென்றார். அப்போது அங்கு நிகழ்ந்த துயரம் ஒன்றை நாகர்கோவிலை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கே.வி.என்.மூர்த்தி இப்படி பதிவு செய்கிறார்.

சங்கரன் குடும்பம் (பழைய படம்)

‘சங்கரன்… கன்னியாகுமரியி்ல் சிறிய வியாபாரி! கடந்த 3ம் தேதி பிழைப்பிற்காக கன்னியாகுமரி வந்தபோது, கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மதிக்கும் ஒ.பி.எஸ். கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் வருகிறார். அப்போது பாதுகாப்பிற்கு வந்த விவிஐபி எஸ்கார்டு வாகனம் பொற்றையடி அருகே சங்கரனை மோதி தூக்கி வீசுகிறது. சங்கரன் சுயநினைவு இழக்கிறார்.

தந்தி டிவி நிருபர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் விபத்தை நேரில் பார்க்கிறார்கள். மனசாட்சியே இல்லாத போலீசார் வாகனங்களை குறுக்கே நிறுத்தி காட்சி பதிவை தடுத்து, சங்கரனை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொள்கிறார்கள். அவரை நாகர்கோவில், இடலாக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமயைில் சேரத்துவிட்டு எஸ்கேப்..!

பின் வேறு மருத்துவனைக்கு குடும்பத்தினர் மாற்றி அவர்கள் தகுதி மீறி பல லட்சம் செலவு செய்கிறார்கள். ஆனால் பலனில்லை. இதுபற்றி காங்கிரஸ் மற்றும் திமுகவினர் மாவட்ட ‘எஸ்பி’ துரைக்கு தெரிவித்தும் வழக்கு பதிவு செய்யக்கூட போலீஸ் தயாரில்லை. ஆதரவும் பணமும் இன்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முறையான கவனிப்பின்றி சங்கரன் சிகிச்சை பெற்றார்.

kanyakumari district, cyclone ockhi, deputy cm o.panneerselvam, jothi nirmala samy ias, rajendrakumar ias

பத்திரிகையாளர் மூர்த்தி

ஆதரவற்ற இந்த அப்பாவி குடும்பத்திற்காக மறியல் வேண்டாம். குறைந்த பட்சம் உரிய சிகிச்சைக்கு கூட குரல் கொடுக்க நாதியில்லை. காரணம் இவர் ஓட்டுக்கள் இல்லாத சிறுபான்மை ஜாதியா? பெரும்பான்மை மதமா? மனித நேயமும் மனசாட்சியும் மறித்து போனதா? நீதியற்ற மனசாட்சியற்ற அதிகாரிகள்! அப்பாவிகள், மனசாட்சிக்கு பயந்தவர்கள் வாழ தகுதியற்ற நேர்மையில்லாத தேசமிது..!’ என வேதனையை பதிவு செய்தார் பத்திரிகையாளர் மூர்த்தி.

துரதிருஷ்டவசமாக இன்று (8-ம் தேதி) ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சங்கரன் இறந்தார். இது குறித்தும் மூர்த்தி பின்வருமாறு பதிவு செய்கிறார்…

‘ஒகி பாதிப்பை பார்வையிட வந்த துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பாதுகாப்பு வாகனம் மோதியதில் கடந்த 3ம் தேதி, கன்னியாகுமரி சிறுவியாபாரி, மீனாட்சிபுரம் சங்கரன் தனியார் மருத்துவமனைகளிலும், பின்னர் பணமின்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி கடந்த இருநாட்களுக்கு முன்பே எஸ்.பிதுரை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், வழக்கு பதிவுகூட போலீசார் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் ஓகி நிவாரணப் பணிகளுக்கு வந்த அரசு செயலாளர்கள் ஜோதிநிர்மலா ஐஏஎஸ் அவர்களிடமும், ராஜேந்திரகுமார் ஐஏஎஸ் அவர்களிடமும் தகவல் தெரிவித்தை அடுத்து, திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு அரசு சார்பில் சிகிச்சைக்கு அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் கண்ணன் பரிசோதித்துவிட்டு உடல்நிலை அதற்குரிய நிலையில் இல்லை என்றனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5.30 மணிக்கு இதய செயல் இழப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ஒகியால் பலியான இவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், கருணை அடிப்படையில் அரசு பணியும் வழங்ப்படுமா? தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக ஜோதிநிர்மலா அவர்கள் கூறியுள்ளார்கள்.முதலிலேயே அவரிடம் தகவல் தெரிவித்திருந்தால் ஒரு வேளை சங்கரன் காப்பாற்றபட்டிருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது. மக்களே! அந்த ஆதரவற்ற சங்கரன் மனைவி குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்!’ என பதிவிடுகிறார் மூர்த்தி.

இந்த பத்திரிகையாளரது துடிப்பில் பத்தில் ஒரு பங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ, துணை முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ ஏற்பட்டிருந்தால் ஒருவேளை சங்கரன் காப்பாற்றப்பட்டிருப்பார். எப்பேற்பட்ட மனிதநேயமும் மனசாட்சியும் உள்ளவர்கள் தன்னைச் சுற்றி இருக்கிறார்கள் என்பதை ஓபிஎஸ் உணர்ந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு அரசு உதவியும் செய்ய வேண்டும்.

 

×Close
×Close