2022-ம் ஆண்டு கடைசி நாளில் அதாவது 31.12.2022 அன்று தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
அதன் நகல் இங்கே தரப்படுகிறது. அதில், ‘புத்தாண்டு தினத்தன்றுகாவல் அதிகாரிகள் உயர் அதிகாரிகளை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க தலைமை அலுவலகங்களுக்கு புறப்படும் வழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்தால் போதுமானது.
புத்தாண்டு தினத்தன்று நிலையங்களிலும் மற்றும் அவரவர் அலுவலகங்களிலும் இருந்து, காவல் அன்றாட பணிகளை மேற்கொள்ளுதல் அவசியமானது.’ என்பதே அந்த சுற்றறிக்கையின் சாராம்சம்.
-
டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட சுற்றறிக்கை
பாராட்டப்பட வேண்டிய ஒரு அறிவுறுத்தல் இது. ஆண்டின் இறுதி நாளில் காவல்துறை இயக்குனர் பிறப்பித்த இந்த உத்தரவு சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் அளவிலான காவல் அதிகாரிகளுக்கு பெரிய நிம்மதி! புத்தாண்டு அன்று ஒவ்வொருவரும் டி.எஸ்.பி அலுவலகங்களிலோ, எஸ்.பி அலுவலகங்களிலோ, டி.ஐ.ஜி அலுவலகங்களிலோ போய் காத்திருக்க வேண்டியதில்லை; மரியாதை செய்கிறோம் என்கிற ரீதியில் மலர் செண்டுகள் வாங்கிக் கொண்டு போவதை தவிர்த்து விடலாம்.
ஆனாலும் நடைமுறையில் இது எந்த அளவுக்கு சாத்தியமானதோ தெரியவில்லை. அதேசமயம் இந்த சர்குலரை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்துகிறார்கள்? என்பதை கண்காணித்து நெறிப்படுத்தி இருக்க வேண்டிய டி.ஜி.பி; மறு தினமே இந்த சர்குலரை மறந்துவிட்டாரா? என்கிற கேள்வி எழுகிறது. காரணம், புத்தாண்டு அன்று டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் உயர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பெரும் படையாகவே முதல் அமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்கள். இந்த புகைப்படங்கள் புத்தாண்டு அன்றே மீடியாவில் வெளிவந்தன.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெறும் டிஜிபி சைலேந்திர பாபு
சாதாரண எஸ்.ஐ-களும், இன்ஸ்பெக்டர்களும் போனில் உயர் அதிகாரிகளுக்கு வாழ்த்து கூறலாம் என்றால்- டி.ஜி.பி, கமிஷனர் ஆகியோர் முதல்வருக்கு போனில் வாழ்த்து கூற முடியாதா? எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி-கள் ஆகியோர் புத்தாண்டு அன்று தங்கள் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்றால்- டி.ஜி.பி-யும், உயர் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் அன்று தங்கள் அலுவலகங்களில் அமர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியம் இல்லையா?
உத்தரவை போடுகிற உயர் அதிகாரிகள் அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லா தரப்பிலும் எழுவது இயற்கை. அதை டி.ஜி.பி போன்ற மாநில உயர் பொறுப்பில் இருக்கிற அதிகாரிகளே நிறைவு செய்யாவிட்டால் வேறு யாரிடம் எதிர்பார்ப்பது?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/