'அம்மா அணி' எனும் புதிய கட்சி தொடங்கிய திவாகரன்!

திவாகரன் 'அம்மா அணி' என்ற புதிய கட்சியை இன்று தொடங்கியுள்ளார்

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், திவாகரன் ‘அம்மா அணி’ என்ற புதிய கட்சியை இன்று தொடங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இதன் தொடக்கவிழா இன்று காலை நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திவாகரன், ‘அம்மா அணி’ இன்று முதல் உயிர்ப்பிக்கப்படுகிறது. இளைஞர்களை அதிகம் சேர்த்து அறிவியல் பூர்வமாக சிந்தித்து உயர்ந்தபட்ச அமைப்பாக இது செயல்படும். சென்னையிலும் தலைமை அலுவலகம் ஒன்று திறக்கப்படும். எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவின் கொள்கையையொட்டி சசிகலாவின் வழிகாட்டுதலுடன் நான் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவேன். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். அதன்பிறகு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும்.

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றியுள்ளேன். ஜெயலலிதாவை பொதுச் செயலாளராகியதில் எனக்கு முழு பங்கு உண்டு. தற்போது டி.டி.வி. தினகரனின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. தினகரனின் செயல்பாடுகள் அனைத்தும் பொய், புரட்டு மாயையை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகளாக தான் உள்ளது. சட்டமன்றம் கோவிலைப் போன்றது. அங்கு பொய் பேசாமல் தனித்துவமாக செயல்படுங்கள் என்று ஆலோசனை வழங்கினேன்.

ஆனால் அதை ஏற்கவில்லை. குடும்ப அரசியல் கூடாது என்கிறார். குடும்பம் இல்லாமல் அவர் எங்கிருந்து வந்தார். சசிகலாவின் அக்காள் மகன் என்பதாலேயே எம்.பி பதவி கிடைத்தது. பின்னர் சில காலம் அரசியலில் இருந்தே காணாமல் போய்விட்டார். தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவை பிடித்து துணை பொதுச்செயலாளர் பதவியை வாங்கிக் கொண்டார். தற்போது தினகரன் மனைவி, வெங்கடேசனின் வழிகாட்டுதலிலேயே கட்சி நடைபெறுகிறது.

சமீபத்தில் வெற்றிவேல் கொடுத்த அறிக்கையே தினகரன் மனைவி கொடுத்ததுதான். இதனால் அதிகமான தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களை அரவணைப்பதற்காகவே இந்த கட்சி தொடங்கியுள்ளேன். தினகரன் கட்சியில் மாநிலப்பொறுப்பாளர்கள் அனைவரும் தினகரனுக்கு நெருங்கிய உறவினர்கள்தான். தினகரன் தன்னிச்சையாக செயல்படுகின்றார். வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் தொண்டர்களின் மனநிலை அறிந்து செயல்படுவோம். விரைவில் மாநில பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதன்பிறகு நகரம், பேரூராட்சி, கிளை வாரியாக நிர்வாகிகளை நியமிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close