நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள சவுக்கு சங்கர், அவர் அரசு பணியில் இருந்தபோது, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான அரசு உத்தரவை சிறையில் வழங்கப்பட்டபோது, அதை அவர் கிழித்து எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அவருக்கு புதிய நெருக்கடி எழுந்துள்ளது.
ஊடகங்களில், சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சகராக கருத்துகளைத் தெரிவித்து வந்த சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் சிறையில் அரசு உத்தரவை கிழித்துப் போட்டதாகவும் அதை சிறைக் குற்றமாகக் கருதப்படுவதால் அவருக்கு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது குறித்து, வழக்கறிஞர் புகழேந்தி ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் வழகறிஞர் புகழேந்தி கூறியிருப்பதாவது: “சிறையில் உள்ள சவுக்கு சங்கர், அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான அரசு உத்தரவை வழங்கியுள்ளனர். அதை அவர் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
சவுக்கு சவுக்கு சங்கர் சிறைப் பதிவுகளை கிழித்து போட்டிருந்தால் அது சிறைக்குற்றம். ஆனால், அது அவருக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள். உயர் நீதிமன்றத்தில், அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம். அல்லது அதை எதிர்க்காமலும் இருக்கலாம். அதை கிழித்து குப்பையில் போடலாம். அதை என்ன வேண்டுமானலும் பண்ணலாம். அந்த உரிமை அவருக்கு இருக்கிறது. சிறைக் குற்றத்தில் வராத ஒரு செயலை சிறைக் குற்றமாகக் காட்டி தண்டித்தது முதல் தவறு என்று வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.
சவுக்கு சங்கர் விவகாரத்தில் ஒரு அரசிய அழுத்தம் இருக்கிறது. அவருக்கு அவசர அவசரமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஒரு முறையான வாய்ப்பு கொடுக்காமல், தண்டித்தார்களோ, இப்போது சிறைக்குள் இருக்கும்போது, அரசு என்ன செய்கிறது என்றால், அவரை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துண்புறுத்தி அவர் அரசுக்கு எதிராக இருந்தார் என்று ஒரு தண்டனை கொடுப்பதாகத்தான் இதை செய்கிறார்கள்.
ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குள் சென்றால் அவரை மேலும் மேலும் துண்புறுத்தலுக்கு உள்ளாக்கி தற்கொலை செய்துகொள்ள வைப்பது, அல்லது இதைவிட ஒரு மோசமான கிரிமினலா மாற்றுவது என்கிற அமைப்பாகத்தான் நம்முடைய அமைப்பு இருக்கிறது என்று வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.
மேலும், சவுக்கு சங்கரை சிறையில் வழக்கறிஞர்கள் கூட மனு அளித்து பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் இந்த வழக்கைப் பொறுத்தவரையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து சங்கர் பேசியிருப்பதால், எல்லோருமே அந்த வழக்கை எடுப்பதற்கு பயப்படுகிறார்கள் என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“