மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு: ஸ்டாலின் உத்தரவு | Indian Express Tamil

மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு: ஸ்டாலின் உத்தரவு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று (டிசம்பர் 3ஆம் தேதி), தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு: ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் ரூ.1500 உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ஓய்வூதியமானது ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று (டிசம்பர் 3ஆம் தேதி), தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, நம் சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளை சம உரிமையுடன் நடத்தி, அவர்களுக்கான வாய்ப்பினை வழங்க வேண்டும்.

இன்று மாற்றுத்திறனாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் சேவையினை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு தரப்பில் விருதுகள் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களின் திறனுக்கேற்ற தொழிற்பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்பினை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அவர்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தி, அவர்கள் தன்னிச்சையாக பிறரைச் சாராமல் வாழ்வதற்கு பயன்பெறும் நவீன உபகரணங்கள் பற்றி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கி, அவர்களுக்கு தடையற்ற சூழலை அமைத்து, நம் சமுதாயத்தை ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோம்” என்று தெரிவித்திருந்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் மென்பொருள் திறன் பயிற்சியினை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், மற்றும் நவீன உபகரணங்கள் உட்பட்டு கண்காட்சி திறந்து வைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1500ஆக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வுத் தொகை ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு ஏற்றவாறு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Differently abled people pension hiked to rupees 1500 says tamil cm mk stalin