ரஜினிகாந்த், கர்நாடக காவியின் தூதுவர் : பாரதிராஜா காட்டமான அறிக்கை

இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது. நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக்காவியின் தூதுவர் என்று!.

கடந்த 10ம் தேதி சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக, சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதில், பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட சில திரைப்பட இயக்குனர்கள் தொடங்கிய தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையும் கலந்து கொண்டது. இதில், மர்ம நபர்கள் சிலர், போராட்டத்தின் போது போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், பாரதிராஜா பன்னாட்டுத் திரைப்பட பயிற்சிப் பட்டறை சார்பில் பாரதிராஜா இன்று ரஜினிகாந்த் மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம்மீது கத்தி வைத்துப் பதம் பார்க்க நினைக்கும், ரஜினி அவர்களின் சமீபத்திய ட்விட்டர் பேச்சு!.

நான் அவரை கேட்கிறேன், எது வன்முறையின் உச்சக்கட்டம் ரஜினி அவர்களே! அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள், என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும், பேச்சு இது!

தங்களுடைய திரைப்படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும், உங்களைப் போன்ற ஒரு நடிகனைத் தமிழ்த் திரை உலகம் இதுவரை சந்தித்ததே இல்லை…

தமிழ்நாட்டிலும் சரி.. உலக அளவிலும் சரி.. தமிழன் கொட்டிக் கொடுத்த பணத்தில், சேர்த்துவைத்த செல்வத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த போது, குரல் கொடுத்தீர்களா?

நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடினீர்களா?

இல்லை, ஒரு அறிக்கையாவது விட்டீர்களா?

மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?

எதற்கும் வாய்த் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம் “இதை ஆரம்பத்திலே கிள்ளியெறிய வேண்டும் என்கிறீர்களா!”

ஓ! இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது. நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக்காவியின் தூதுவர் என்று!.

உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது.

நீங்கள் எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்.. என்று பாரதிராஜா தனது அறிக்கையில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

×Close
×Close