பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு

இரு அணிகளும் இணைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இரு தரப்பிலும் தலா 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவை கலைப்பதாக ஓபிஎஸ் இன்று அறிவித்தார்.

சென்னை அடுத்த திருவேற்காட்டில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் பொதுக்கூட்டம் இன்று(11.06.17) மாலை நடந்தது. கூட்டத்தில் சிறப்புறையாற்றிய ஓபிஎஸ், ‘அதிமுக அணிகள் இணைப்பை மக்கள் விரும்பவில்லை. மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்பட முடியாது என்பதால் இன்றுடன் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுகிறது’ என்று அதிரடியாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குக் பின்னர் சசிகலாவை முதல்வராக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் 2 எம்பிக்கள் ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அடுத்த சில மாதங்களில் கட்சியின் துணைப் பொது செயலாளராக இருந்த டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து இரு அணிகளும் இணைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இரு தரப்பிலும் தலா 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. ஓபிஎஸ் தலைமையிலான அணியில் சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜெ. மரணத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை இழுபறியானது. இந்நிலையில் ஜாமீனில் வந்த டிடிவி தினகரனை கட்சி எம்.எல்.ஏ.க்கள் 33 பேர் சந்தித்து ஆதரவு கொடுத்தனர்.

இந்நிலையில்தான் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை குழுவை கலைப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் வரும் 14ம் தேதி சட்டமன்ற கூட்டத் தொடர் கூடுவது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close