உடல்நலம் குன்றியதால் திவாகரன் உளறுகிறார் : டி.டி.வி. தினகரன் பேட்டி

டிடிவி தினகரன் மீது அவரின் உறவினர் திவாகரன் குற்றம் சாட்டி வருவதற்கு உடல்நலம் குன்றியது தான் காரணம் என அவர் கூறியுள்ளார்.

கும்பகோணம் அருகே சுவாமிமலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரின் உறவினர் திவாகரன் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பட்டது. மேலும் தினகரனின் அரசியல் பயணம் குறித்தும் கேட்கப்பட்டது.

கேள்விகளுக்குப் பதிலளித்த தினகரன் :

“மாநில அரசு நலனுக்காகத்தான், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறேன். அதேபோல் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாநில அரசின் நலனுக்காக மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக இல்லை. அவர்களுடைய சுயநலனுக்காகத்தான் அவர்கள் இணக்கமாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் எப்படி வெற்றிபெறுவார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வால் வெற்றி பெறமுடியவில்லை. அவர்களால் எப்படி 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வி தான் அடையும்.
திவாகரன் நிருபர்களிடம் கூறும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிப்பேனே தவிர தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் எனக் கூறியுள்ளதாக நான் கேள்விப்பட்டேன்.

திவாகரனுக்குக் கடந்த 2002-ம் ஆண்டு முதல் உடல்நிலை சரியில்லை. உடல்நலம் குன்றியதால் அவர் உளறுகிறார். அவருக்கு எங்கள் மீது பாசம் இல்லாவிட்டாலும் நாங்கள் உறவினர் என்ற முறையில் அவர் மீது பாசம் வைத்துள்ளோம். அதனால் அவர் பேசுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவரைப்பற்றி மன்னார்குடியில் உள்ளவர்களிடம் விசாரித்தாலே தெரியும்.” என்றார்

ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் 2021ம் தேர்தலில் தினகரன் அதிக வாக்குகள் பெற்றுவிட வாய்ப்புகள் உள்ளது என மக்கள் பேசி வரும் நிலையில், திவாகரனின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் இடையே தற்போது உருவாகியுள்ள விரிசல்களால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close