Advertisment

"இனியும் மத்திய அரசுக்கு தமிழக அரசு தொண்டூழியம் செய்தால்...." - ஸ்டாலின் விடுக்கும் எச்சரிக்கை!

காழ்ப்புணர்வுடன் அ.தி.மு.க. அரசு செயல்பட்டதால், பயிற்சி பெற்ற அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
"இனியும் மத்திய அரசுக்கு தமிழக அரசு தொண்டூழியம் செய்தால்...." - ஸ்டாலின் விடுக்கும் எச்சரிக்கை!

தமிழக அரசு அனைத்து சாதியினரையும் உடனே அர்ச்சகராக்க உத்தரவிட வேண்டும் என்றும், இல்லாவிடில் தோழமைச் சக்திகளுடன் களம் காண நேரிடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆண்டவனின் சன்னதியிலேயே மனிதர்களைப் பிரித்து வைக்கும் போக்கு காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து ஆலயத்தில் அனைவரும் சமம், அனைத்து சமுதாயத்தினரும் கருவறை வரை சென்று வழிபாடு நடத்தும் உரிமையுள்ளவர்கள் என்பதை நிலைநாட்ட, தொடர்ந்து பாடுபட்டு வருகிறது திராவிட இயக்கம்.

தமிழகத்தில் ஆதிக்கப் பிரிவினரால் இதற்குப் பல தடைகள் உருவாக்கப்பட்ட நிலையில், கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அற்புதமான திட்டம் செயல்பாட்டுக்கு வருவது, சிந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. அங்கே அர்ச்சகர் பணி காலியாக உள்ள 62 இடங்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் வாரியம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்துள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது பெருமையோடு குறிப்பிடத்தக்கது.

பழங்குடி இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என மொத்தமாக 36 பேர் அர்ச்சகராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். திருவிதாங்கூர் தேவசம் வாரியத்திற்குட்பட்ட அனைத்துக் கோவில்களிலும் இனி இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும், பொதுப்பட்டியலின் வழியாகவும் தகுதி வாய்ந்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள மற்ற கோவில்களிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற அங்கே ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாண்புக்குரிய முதல்வர் திரு. பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் வரவேற்புக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் உரியன. திராவிட இயக்கம் வழங்கிய அருங்கொடைகளில் ஒன்றான சமூகநீதி செயல்பாடுகளில் முன்னோடியான தமிழகம் ஒரு நூற்றாண்டு காலமாக சாதி எல்லைகளைக் கடந்த வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி வருகிறது. திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்பான நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே கோவில்கள் பாதுகாப்புக்கான அறநிலையத்துறைச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற தீர்மானத்தை 15-04-1974 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார். நாடாளுமன்றத்தில் தி.மு.கழக உறுப்பினராக இருந்த உலகநம்பி அவர்கள், “பரம்பரை அர்ச்சகர் சட்டத்தை ஒழித்து அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்”, என்ற தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்.

கோவில் கருவறை வரை சமூகநீதியைக் காக்கும் வகையில் தி.மு.கழக அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், 1976ஆம் ஆண்டு ஜனவரியில் கழக அரசு கலைக்கப்பட்டது. பின்னர், அமைந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் நீதிபதி மகராஜன் தலைமயிலான குழு அமைக்கப்பட்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு அரசியல் சாசனத்தில் உள்ள இடர்ப்பாடுகள் களையப்பட்டு, சமூகநீதியை நிலைநாட்டுவதற்கானப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், அனைத்து சாதியினரும் அர்ச்சராவதற்காக திருச்சி அருகே வேதாகம கல்லூரி நிறுவப்படும் என 1991ல் அறிவிக்கப்பட்டு, 1996 வரை தொடர்ந்து அறிவிப்புகளாகவே இருந்து கடைசிவரை நிறைவேற்றப்படாமலேயே போனது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் 5வது முறையாகத் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பினை தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்றநிலையில், முதல் நடவடிக்கையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானத் தனிச் சட்டத்தை (Act 15 of 2006) நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, திருவண்ணாமலை, திருவரங்கம் உள்ளிட்ட இடங்களில் சைவ - வைணவ ஆகமப் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு, அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த 207 பேர், உரிய பயிற்சி பெற்று, அர்ச்சகராகும் தகுதியையும், அதற்குரிய பட்டயத்தையும் பெற்றனர்.

வரலாற்றுப் புரட்சியாக நடந்த இந்த மாற்றங்களை ஏற்க இயலாமல், ஒரு சிலர் எதிர்ப்புக்காட்டி உச்சநீதிமன்றம் வரை சென்று, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்குத் தடையாணை பெற்றனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015 அன்று நீதியரசர் திரு. ரஞ்சன் கோகாய், நீதியரசர் திரு. ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், “தமிழ்நாடு அரசின் (தி.மு.கழக அரசின்) அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராகும் சட்டம் செல்லும்”, என்று தெரிவித்தனர். எனினும், அத்தீர்ப்பின் பகுதி 43-ல், “ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் அதன்படிக்கான சட்டப்பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும்”, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் காரணம் காட்டி, தி.மு.க. அரசின் சட்டத்தை நிறைவேற்றுவதா என்ற காழ்ப்புணர்வுடன் அ.தி.மு.க. அரசு செயல்பட்டதால், பயிற்சி பெற்ற அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர். இதனைக்கண்டித்து மறைந்த ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோதே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னெடுத்தப் போராட்டத்தில், தி.மு.கழகம் பங்கெடுத்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சராக்க வலியுறுத்தியது. அதனை அ.தி.மு.க. அரசு இன்றளவும் கண்டுகொள்ளாத நிலையில்தான், அண்டை மாநிலமான கேரளாவில், தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் உள்ளிட்ட பிற சமூகங்களைச் சேர்ந்த 62 பேரை அர்ச்சகராக நியமிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவில் 1942 ஆம் ஆண்டு முதலே திருவிதாங்கூர் தேவசம் வாரியத்திற்குட்பட்ட கோவில்களில் அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வந்துள்ளது. அதற்கேற்ப, பல ஆண்டுகளுக்கு முன்பே அம்மாநிலத்தில் அதற்கான அரசாணை போடப்பட்டுள்ளது. அது தற்போது செயல்பாட்டுக்கும் வந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசாணை என்பதைக் கடந்து, தனி சட்டமே நிறைவேற்றப்பட்ட நிலையிலும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மனமில்லாத ஒரு அரசு இப்போதும் ஆட்சி செய்து வருவது, திராவிட கோட்பாடுகளுக்கு எதிரானதாக உள்ளது. மனிதர்களில் யாரும் பிறப்பால் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது. அனைவரும் சமமானவர்கள் என்பதே மனித உரிமையின் அடிப்படைத் தன்மை. அதனை மறுத்து, பிறப்பின் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வு கற்பித்து, அதனை கடவுளின் பெயரால் செயல்படுத்த நினைப்பதை உண்மையான ஆன்மிக அன்பர்கள் கூட ஏற்கமாட்டார்கள்.

ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூகநீதியாகும். அதனை நிலைநாட்ட, கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்குப் பாடம் கற்று, உடனடியாகச் செயல்பட வேண்டுமென வலியுறுத்துவதுடன், மத்திய பாஜக அரசுக்குத் தொண்டூழியம் செய்வதையே தனது நிரந்தரக் கடமையாக கொண்டிருக்கும் ‘குதிரை பேர’ அரசு, இனியும் அலட்சியமாக செயல்பட்டால் தி.மு.கழகம் தனது தோழமைச் சக்திகளுடன் களம் காணும் என எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment