நிறைவுபெற்றது திமுக அனைத்துக்கட்சி கூட்டம். ஏப்-5 முழு அடைப்பு போராட்டம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவுபெற்றது. போராட்டங்கள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் காலக்கெடு முடிந்து அமைக்கப்படாததைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து தமிழக போராட்டம் நடத்தும் முடிவை திமுக எடுத்தது. இது குறித்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

காலைத் துவங்கிய இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிட கழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்களும் திரண்டு தமிழகத்தில் காவிரி விவகாரம் தொடர்பான போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்தனர். இதன் நிறைவில் போராட்டம் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கட்சி நிறைவிற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் மு.க ஸ்டாலின். இதில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

– வருகின்ற ஏப்-5ம் தேதி தமிழகத்தில் அனைத்துக்கட்சி சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குக் கட்சித்தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் ஏப்-3ம் மாணவர்களின் தேர்வை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்தை ஏப்-5ம் இணைந்து நடத்துமாறு வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

– காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கும் விதமாக மீட்பு பயணம் நடத்தத் திட்டம். காவிரி டெல்டா பகுதிகளில் காவிரி மீட்பு பயணம் என்ற பயணத்தை அனைத்துக்கட்சி சார்பிலும் நடத்த முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். எனினும் இது குறித்த மற்ற விவரங்களை ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

– ஏப்-15ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அவருடன் எந்த மத்திய அமைச்சர்கள் வந்தாலும் அவர்களுக்குக் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாக அவர் அறிவித்தார்.

இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்களுக்கு விவசாய சங்கத்தினர் மட்டுமின்றி, அரசியல் கட்சியினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்டாலின் முன்வைத்தார். மேலும் வாய்ப்பு ஏற்பட்டால் அதிமுக-விற்கும் அழைப்பு விடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
தற்போது வள்ளுவர் கோட்டத்தில் பச்சை துண்டு அணிந்து மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

×Close
×Close