Advertisment

கொடுத்து பறித்த தி.மு.க? உள்ளாட்சி தலைவர்கள் தேர்வு களேபரம்

திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய சில நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளை திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு கைப்பற்றியிருப்பது களேபரம் ஆகியுள்ளது. இது கூட்டணி கட்சிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
thirumavalavan, vck, dmk, mk stalin, திருமாவளவன், விசிக, திமுக, முக ஸ்டாலின், நெல்லிக்குப்பம், Nellikuppam, cuddalore district

திமுக தனது கூட்டணி கட்சிகளிடம், சீட் பங்கீட்டில் கெடுபிடி காட்டினாலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது என்று நிம்மதியடைந்த நிலையில், சில இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் வெற்றி பெற்று கொடுத்து பறித்திருப்பதாக கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.

Advertisment

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 22ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி ஸ்வீஸ் செய்து வெற்றி பெற்றது. மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இதையடுத்து, இன்று மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர், நகராட்சிகளின் நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீட்டில் கெடுபிடி காட்டியது. இருப்பினும், கூட்டணி கட்சிகள் கொடுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டனர்.

இதைத் தொடர்ந்து, திமுக தலைமை மார்ச் 3ம் தேதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்), மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மேயர், துணை மேயர், நகர் மன்றத் தலைவர், நகர்மன்றத் துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளை ஒதுக்கீடு செய்து அறிவித்தது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி ஒதுக்கப்பட்டது. மேலும், திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு திமுக அள்ளிக் கொடுத்ததாகவே பலரும் கருத்து தெரிவித்தனர். திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைமைப் பதவிக்கு கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மறைமுகத் தேர்தல் இன்று (மார்ச் 4) நடைபெற்றது. இந்த மறைமுகத் தேர்தலின்போது, திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுக சார்பில் அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் திமுக கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அந்த வகையில், திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு ஒதுக்கபட்ட, கடலூர் மாவட்டத்தில் உள்ள, நெல்லிக்குப்பம் நகராட்சியில் திமுகவைச் சேர்ந்த போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நெல்லிக்குப்பம் நகராட்சியை விசிக கேட்டு வாங்கிய நிலையில், அங்கே திமுக வெற்றி பெற்றிருப்பது விசிகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், திமுக வேட்பாளர் ஜெயந்தி 23 வாக்குகளும், விசிக வேட்பாளர் 3 வாக்குகளும் பெற்றனர். இதனால், திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி பெற்றார். இதனால், அதிர்ச்சியடைந்த விசிகவினர், திமுகவினர் செய்தது கூட்டணி துரோகம் என்று கண்டனம் தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.

அதே போல, தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை, திமுக தனது கூட்டணி கட்சியான விசிகவுக்கு ஒதுக்கியிருந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட அதிருப்தி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக கூட்டணியில் விசிக சார்பில் சின்னவேடி என்பவர் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மறைமுக தேர்தலில், சின்னவேடி 7 வாக்குகள் பெற்ற நிலையில், எதிர்த்து போட்டியிட்ட அதிருப்தி வேட்பாளர் திமுக உறுப்பினர் சாந்தி புஷ்பராஜ் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக உறுப்பினரே போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதிர்ச்சி அடைந்த விசிகவினர் இது கூட்டணி துரோகம் என்று கூறி கண்டனம் தெரிவித்து தருமபுரி - பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)-க்கு கரூர், புலியூர் பேரூராட்சி ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கே திமுக போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

புலியூர் பேரூராட்சியில் சிபிஐ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே கவுன்சிலரான கலாராணி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் 3வது வார்டில் வெற்றி பெற்ற புவனேஸ்வரி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து வெற்றிப் பெற்றார். இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடனரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவி, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் மனோகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின்போது, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தாக்கப்பட்டதாகவும் சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டதாகவும் சிபிஎம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கே திமுக போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல, திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி மாவட்டம், அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் தேர்தலில், திமுக வேட்பாளர் ரேணுப்பிரியா வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 19 வார்டுகளிலும், அதிமுகவினர் 7 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சியினர் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். அமமுக மற்றும் சுயேட்சை தலா 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும் வெற்றி பெற்றனர்.

தேனி - அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தேனி - அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி சார்பாக 22வது வார்டு கவுன்சிலர் சற்குணம் என்பவர் நிறுத்தப்பட்டார். ஆனால், நகர் மன்ற தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் 10வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா மனுத்தாக்கல் செய்து வெற்றி பெற்றார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் அமமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் 27 உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் சுந்தரவள்ளி வெற்றி பெற்றார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய சில நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளை திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு கைப்பற்றியிருப்பது களேபரம் ஆகியுள்ளது. இது கூட்டணி கட்சிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளை கொடுப்பதுபோல கொடுத்து பறித்துக்கொண்டதாக திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இது கூட்டணி துரோகம் என்றும் திமுக தலைமை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுக வேட்பாளர்கள் கைப்பற்றி இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Vck Congress Cpi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment