Advertisment

பொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்?

உண்மையில் இந்த சென்னை மாகாண சட்டமன்ற நூற்றாண்டை கொண்டாடி இருக்க வேண்டும் என்றால், அதிமுக அரசுதான் கொண்டாடி இருக்க வேண்டும். ஏனென்றால், சென்னை மாகாண சட்டமன்ற நூற்றாண்டு 2021 ஜனவரி 11 அன்று நிறைவடைந்தது

author-image
Balaji E
New Update
DMK CM MK Stalin, stalin lead TN govt celebrates madras presidency assembly centenary, madras presidency assembly centenary confusion, aiadmk, jayakumar, mk stalin, justice paryty, சென்னை மாகாண சட்டமன்ற நூற்றாண்டு விழா, நீதிக் கட்சி, திமுக, முக ஸ்டாலின், கருணாநிதி படத்திறப்பு, karunanidhi photo open in assembly, madras presidency assembly

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 19ம் தேதி டெல்லி சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஐ சந்தித்து சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவுபெற்றதற்கான விழாவுக்குத் தலைமைதாங்கி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைக்க அழைப்புவிடுத்தார்.

Advertisment

திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த சூழலில்தான், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து இன்னும் 100 ஆண்டுகள் ஆகவே இல்லை அதற்குள் எப்படி நூற்றாண்டு விழா கொண்டாடலாம். சட்டப்பேரவையில் கலைஞரின் உருவப்படத்தை திறந்துகொள்ளுங்கள் அதை யாரும் எதிர்க்கவில்லை. அதற்காக நூற்றாண்டு விழா என்று தவறாக வரலாற்றை திரிக்கலாமா என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தற்போது, எல்லோரும் உண்மையில் சென்னை மாகாணத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதா என்று கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 1937-ம் ஆண்டுதான் நடந்தது. சட்டமன்ற பொன்விழா கொண்டாடும் நேரத்தில், முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவை பொன்விழா நடத்த முடியவில்லை.

இதையடுத்து, ஆட்சிக்கு வந்த திமுக 2 வருடம் கழித்து, அதாவது 1989-ம் ஆண்டுதான் பொன்விழாவை கொண்டாடினார்கள். 1937-ம் ஆண்டை கணக்கிட்டு தான் சட்டப்பேரவை பொன்விழா அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது.

ஆனால், இப்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பாக, 1921-ம் ஆண்டை கணக்கில் எடுக்கிறார். இது முரண்பாடாக இருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதி படத்தை திறக்கட்டும். இது அவர்களது கட்சியும், ஆட்சியும் முடிவு செய்திருக்கும் விஷயம். இதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், விழா கொண்டாடும் நோக்கத்துக்காக வரலாற்றை மாற்றி எழுத கூடாது.

அப்படியானால், கருணாநிதி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்ற 1937-ம் ஆண்டை கணக்கிட்டு பொன்விழா எடுத்தது தவறா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். உண்மையில், சுதந்திரம் பெற்றபின்னர் 1952-ம் ஆண்டை தான் முதல் சட்டமன்றமாக கணக்கில் எடுக்கவேண்டும். சுதந்திரம் பெற்றபின்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றம் அந்த ஆண்டில்தான் கூடியது.

ஏனென்றால், 1937-ம் ஆண்டில் சட்டமன்றம் கூடிய சமயத்தில் அனைவருக்கும் ஓட்டுரிமை என்பதே கிடையாது. சுதந்திரம் பெற்றபின்புதான் அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டு 1952-ம் ஆண்டில் முதல் சட்டமன்றம் உருவானது. அதனால், 1952-ம் ஆண்டை கணக்கிட்டு, அதிமுக ஆட்சியில் சட்டமன்ற வைரவிழா கொண்டாடப்பட்டது. ஜனநாயக முறைப்படி 1952-ம் ஆண்டைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். திமுக தரப்பு வாதப்படி 1921-ம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொள்ள வாய்ப்பே கிடையாது. ஒருவேளை 1937-ம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால்கூட, நூற்றாண்டு விழா கொண்டாட இன்னும் பல வருடங்கள் உள்ளன. அதற்குள்ளாக ஏன் இந்த அவசரம்? எனவே மக்களை முட்டாளாக்கும் முயற்சியிலோ, வரலாற்றை திசைதிருப்பும் முயற்சியிலோ ஈடுபடுவது என்பது ஏற்கமுடியாத விஷயம்.” முடியாது என்று திமுக அரசு தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா கொண்டாடும் முடிவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

திமுக தலைவரும் மு.க.ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படித்தான் குறிப்பிட்டுள்ளார். “குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஐகுடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தேன். சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவுபெற்றதற்கான விழாவுக்குத் தலைமைதாங்கி, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்க அழைப்புவிடுத்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் சென்னை மாகாண சட்டப்பேரவை அமைந்து நூறாண்டுகள் ஆகிவிட்டதா? சென்னை மாகாண சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை எந்த கணக்கின் அடிப்படையில் கொண்டாடுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

எந்த அடிப்படையில் சென்னை மாகாண சட்டமன்றத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது?

பிரிட்டிஷ் ஆட்சியில், பிரிட்டிஷ் இந்திய செயலாளர் எட்வின் மாண்டேகுவும் இந்தியாவின் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டும் அளித்த பரிந்துரையின்படி, இந்தியர்களுக்கு ‘சுயாட்சி’ வழங்கும் சட்டம் 1919ல் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசிடமே அதிகாரத்தைக் குவித்து வைக்காமல், மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சட்டமன்றங்களை உருவாக்கி, இந்தியர்களே அதனை நிர்வகிக்கும் வகையில் குறைந்தபட்ச அதிகாரங்களை வழங்குவது என்பதுதான் இந்த சட்டம்.

கிழக்கிந்திய கம்பெனியார்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த இந்தியாவை, 1857ல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போருக்கு பின்னர், நேரடியாக விக்டோரியா மகாராணியின் பிரகடனத்துக்கு பிறகு, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் ஆட்சிக்கு வருகிறது. பிரிட்டிஷ் அரசும் இந்தியாவில் படிப்படியாக பாராளுமன்ற முறையிலான ஆட்சியை அறிமுகப்படுத்துவதற்கான முன்னெடுப்பைத் தொடங்கியது.

அந்த வகையில், பிரிட்டிஷ் ஆட்சியில், 1917ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய செயலாளர் எட்வின் மாண்டேகுவும் இந்தியாவின் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டும் (மாண்டேகு செம்ஸ்போர்டு குழு) அளித்த பரிந்துரையின்படி, இந்தியர்களுக்கு ‘சுயாட்சி’ வழங்கும் சட்டம் 1919ல் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசிடமே அதிகாரத்தைக் குவித்து வைக்காமல், மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சட்டமன்றங்களை உருவாக்கி, இந்தியர்களே அதனை நிர்வகிக்கும் வகையில் குறைந்தபட்ச அதிகாரங்களை வழங்குவது என்பதுதான் இந்த சட்டம்.

அதன்படி, 1920ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சென்னை மாகாண முதல் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. டிசம்பர் 17ல் கடலூர் ஏ.சுப்பராயலு முதலமைச்சரானார். மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சென்னை மாகாண முதல் சட்டமன்றக் கூட்டம் 1921ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் நாள் நடைபெற்றது. நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் சமூகநீதி நடவடிக்கைகளை தொடங்கிவைத்ததில் முதல் படியை எடுத்து வைத்தது. அந்த அடிப்படையில், சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு இந்த 2021ம் ஆண்டில் நூறாண்டு வயதாகிறது. அந்த வகையில் பார்த்தால் இது சென்னை மாகாண சட்டமன்றத்தின் நூற்றாண்டுதான்.

திமுகவை எப்போதும் அதன் தலைவர்கள் நீதிக்கட்சியின் வழித்தோன்றலாகவே அறிவித்து வந்துள்ளனர். அந்த வகையில், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 1996-97ல் தமிழக சட்டமன்றத்தின் 75ஆம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

அதற்கு பிறகு, 15 ஆண்டுகள் கழித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆட்சியில் 2012ல் சுதந்திரத்திற்கு பிறகான தமிழ்நாடு சட்டமன்றத்தின் 60ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஜெயக்குமார், இந்த அடிப்படையில்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டை தவறாக கொண்டாடுகிறார் என்று விமர்சிக்கிறார். ஆனால், நீதிக்கட்சியின் வாரிசாக அறிவித்துக்கொள்ளும் திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இந்த 2021ம் ஆண்டில், சென்னை மாகாண சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தயாராகியுள்ளது.

அதிமுக சுதந்திரத்திற்குப் பிறகான சென்னை மாகான சட்டமன்றத்தை கணக்கிட்டு 60ம் ஆண்டு விழாவைக் கொண்டாடியது என்றால், திமுக சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், நீதிக்கட்சி வெற்றி பெற்று முதல் சட்டமன்றம் கூடிய நாளை கணக்கிட்டு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. உண்மையில் இந்த குழப்பம் அவரவர் கணக்கு சார்ந்து ஆண்டுகளின் எண்ணிக்கையை முன்வைப்பதனாலேயே எழுகிறது. இதில் மக்கள்தான் பாவம், அவர்கள் ஆட்சியில் உள்ள திமுக அரசு சொல்கிற ஆண்டை கணக்கிடுவதா, அல்லது இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த, தற்போது ஆட்சியை இழந்துள்ள அதிமுகவினர் சொல்வதை கணக்கில் கொள்வதா என்ற குழப்பதில் உள்ளனர்.

ஆனால், ஒருவேளை, உண்மையில் இந்த சென்னை மாகாண சட்டமன்ற நூற்றாண்டை கொண்டாடி இருக்க வேண்டும் என்றால், அதிமுக அரசுதான் கொண்டாடி இருக்க வேண்டும். ஏனென்றால், சென்னை மாகாண சட்டமன்ற நூற்றாண்டு 2021 ஜனவரி 11 அன்று நிறைவடைந்தது. அப்போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது. பிப்ரவரி 26ம் தேதி தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அதனால், வரலாற்று ஓர்மை இருந்திருக்குமானால், இந்த நூற்றாண்டு விழாவை அதிமுக கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால், அதிமுக அதை தவறவிட்டதால் இப்போது திமுக கொண்டாடுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Aiadmk Cm Mk Stalin Tamil Nadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment