திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 சீட்; கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

dmk congress alliance, congress gets 25 seats, cogress gets kanniyakumar parliament seat, திமுக, காங்கிரஸ், திமுக காங்கிரஸ் கூட்டணி, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், திமுக காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்து, tamil nadu assembly elections 2021, dmk conress alliance signed, ks alagiri, mk stalin, dmk, congress, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்படாததால் இழுபறி நீடித்து வந்தது. காங்கிரஸ் கட்சி முதலில் 50 தொகுதிகளைக் கேட்டது பின்னர், 30-35 இடங்களைக் கேட்டது. ஆனால், திமுக 22-24 தொகுதிகள் தருவதாக கூறியதால் இரு கட்சிகள் இடையே தொகுப்பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்து வந்தது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இது போன்ற ஒரு சூழலை நான் சந்தித்ததில்லை என்று கண்கலங்கினார்.

இருப்பினும், திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின், இல்லத்துக்கு சனிக்கிழமை இரவு 11 மணிக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் சென்று மு.க.ஸ்டாலின் உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்த 45 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திமுக – காங்கிரஸ் கட்சி இன்று (மார்ச்7) அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் – தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி முன்னியிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தமிழக காங்கிரஸ் கட்சி இன்று திமுகவுடன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி ஒரு எழுச்சியையும் மகிழ்ச்சியையும் எங்களுக்கு அளித்திருக்கிறது காரணம் என்னவென்றால், தமிழக காங்கிரஸ் பன்னெடுங்காலமாகவே சொல்லி வருகின்ற ஒரு தத்துவம் என்னவென்றால், மதசார்பற்ற இந்த கூட்டணி என்பது ஒரு நேர்க்கோட்டில் எங்களை இணைத்திருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் சேர்ந்து இந்த மதச்சார்பற்ற கூட்டணியை அமைத்திருக்கிறோம். அதில் எங்களை இணைப்பது மதச்சார்பற்ற தன்மைதான். அது வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான், தமிழகத்தில் இருக்கிற திமுகவில் இருந்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். பாஜக இன்றைக்கு இந்தியாவினுடைய மிகப்பெரிய நோயாக வளர்ந்திருக்கிறது. அது நோயாக இருப்பதோடு மட்டுமில்லாமல் அந்த நோயை மற்றவர்கள் மீதும் பரப்ப அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

கொரோனா வைரஸைவிட அவர்கள் ஆபத்தான ஒரு ஆயுதமாக இன்று விளங்கிவருகிறார்கள். இந்தியாவில் இருக்கிற பல்வேறு அரசியல் கட்சிகளிலும் அவர்கள் உட்புகுந்து அந்த இயக்கங்களை உடைப்பது, பலவீனப்படுத்துவது அல்லது அதில் இருக்கிறவர்களை கட்சி மாற வைப்பது, அரசாங்கத்தை சீர்குலைப்பது. அரசாங்கத்தை கவிழ்ப்பது என்று பல்வேறு நிகழ்வுகளை அவர்கள் செய்துவருகிறார்கள். இன்றைக்கு அதை நாம் புதுவையிலும்கூட பார்க்கிறோம். காங்கிரஸுக்கு ஆழமான வேர் இருக்கிற புதுவையில் மாநிலத்தில் இன்றைக்கு ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. அதற்காகவே ஒரு துணை நிலை ஆளுநர் அனுப்பப்பட்டார். அரசாங்கத்தினுடைய அன்றாடப் பணிகளைக் கூட அவர் தடுத்து நிறுத்தினார். சட்டத்திற்கு புறம்பாக அவர் செயல்பட்டார். ஆனால், இவைகளுக்கு எல்லாம் மத்திய அமைச்சரவை, மத்திய அமைச்சரகம் உறுதுணையாக இருந்தது என்பதுதான் ஒரு சோகமான செய்தி.

எனவேதான், தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கத்தை நிலைநாட்டிவிடக் கூடாது, அவர்களுக்கு ஏவல் புரிகிற அதிமுகவுக்கு ஒரு வாய்ப்பை அளித்துவிடக் கூடாது சமுகநீதிக்கு எதிராக இருக்கக்கூடிய இந்த சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்த தேர்தல் என்பது ஒரு ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்பதற்கான ஒரு தேர்தல் அல்ல. இவகளுக்கும் மேலாக, ஒரு கொள்கையை உயிரோட்டமாக வைத்துகொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தேர்தல் என்று கருதி, தமிழக காங்கிரஸ் இதிலே தன்னை ஈடுபடுத்திக்கொன்டிருக்கிறது. எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற தனித்துவமான இடத்தை மனதில் வைத்து தமிழகத்துக்கு தொடர்ச்சியாக வந்து அரசியல் சுற்றுப்பயணம் செய்கிறார். தேர்தல் பரப்புரை செய்கிறார்.

ராகுல் காந்தி தெளிவான ஒரு கருத்தை சொன்னார். இந்த தேர்தல் என்பது வெறுமனே ஒரு கூட்டணி அல்ல. இந்த தேர்தல் என்பது இரண்டு தந்துவங்களுக்கும் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான ஒரு யுத்தம் என்று கருத வேண்டும். இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெற வெண்டும். எதிரிகள் இதில் வெற்றி பெறுவார்கள் என்று சொன்னால் ஒரு ஆட்சி மாறி இன்னொரு ஆட்சி வருகிறது என்பது பொருள் அல்ல. ஒரு தத்துவம் விழுந்து இன்னொரு தத்துவம் எழுந்ததாக பொருள்படும் என்று கூறினார்.

எனவே தேசிய தலைவர்கள், மிகக்கடுமையாக உழைத்து இந்த தேர்தலிலே நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்கள். அதன் அடிப்படையில்தான், இந்த கூட்டணி உருபெற்றிருக்கிறது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த ஒப்பந்தத்திலே கையெழுத்திட்டிருக்கிறோம். காரணம் என்னவென்றால், எல்லோரையும் சேர்ந்து தேரை இழுக்க வேண்டும் என்பதுதான் பொது நியதி. அந்த பொது நியதியின் அடிப்படையில், மதச்சார்பற்ற கூட்டணி என்ற மாபெரும் தேரை இழுக்க எங்களுடைய கூட்டணியில் இருக்கிற அனைத்து கட்சிகளும் சேர்ந்து இழுத்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பதற்காக இதனை செய்திருக்கிறோம்.

இதிலே நாங்கள் இந்த கூட்டணியில் கையெழுத்திட்டிருக்கிறொம் என்பது 25 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் நாங்கள் கையெழுத்திட்டிருக்கிறோம். அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களுடைய கருத்து.” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விடவும் குறைவான தொகுதிகளை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி “அரசியலில் ஏற்ற, இறக்கங்கள் இயல்பு. வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில்கூட போட்டியிடலாம்” என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk congress alliance 25 seats for congress in tamil nadu assembly elections 2021

Next Story
News Highlights: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com