‘வாழ்கிற காலத்திலேயே கட்சிக்கு தலைவரை உருவாக்கி விட்டோம்’ பேராசிரியர் நினைவுகள்

‘யோ, எப்படிய்யா இவ்வளவு பெண்கள் கூட்டத்திற்கு வர்றாங்க... ரூபா கொடுத்து கூப்பிடுறியா?’ என நேரடியாகவே கேட்டார்.

By: March 10, 2020, 7:43:49 PM

பேராசிரியர் அன்பழகனை வைத்து, திமுக.வில் அதிகமான பொதுக்கூட்டங்களை நடத்தியவராக புழல் நாராயணன் என்கிற நிர்வாகியையே திமுக.வினர் கை காட்டுகிறார்கள். சென்னையை அடுத்த புழல் ஒன்றிய முன்னாள் செயலாளர் இவர்!

2006 தொடங்கி 2015 வரையிலான காலகட்டத்தில் புழல் ஒன்றிய செயலாளராக இருந்தார் இவர். அந்தக் காலகட்டத்தில் மறைந்த பேராசிரியர் அன்பழகனை வைத்து 48 கூட்டங்களை புழல் ஒன்றியத்தில் நடத்தியிருக்கிறார்.

குக்கிராமத்தை விரும்பிய பேராசிரியர்

பேராசிரியர் நினைவுகள் பற்றி புழல் நாராயணன் நம்மிடம், ‘திமுக தலைவர்கள் பலரையும் அழைத்து ஒன்றியச் செயலாளர் என்ற முறையில் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். ஆனாலும் பேராசிரியருக்கும் எங்கள் ஒன்றியத்திற்கும் உருவான ஒரு பிணைப்பு அவரை வைத்து அதிக கூட்டங்கள் நடத்தும் பாக்கியத்தை கொடுத்தது. முதன்முதலில் 2006-ல் மாவட்டச் செயலாளர் சிவாஜி அடுத்தடுத்து இரு கூட்டங்களுக்கு பேராசிரியரின் அப்பாயின்மென்டை எங்களுக்கு வாங்கிக் கொடுத்தார். அதன்பிறகு பேராசிரியருடன் எனக்கே அறிமுகம் உருவாகிவிட்டது. ஆனாலும் கட்சி முறைப்படி மாவட்டச் செயலாளர் ஒரு போன் போட்டு, பேராசிரியரின் உதவியாளர் நடராஜனிடம் தகவல் சொல்வார். நான் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் நேரில் பேராசிரியர் இல்லத்திற்கு சென்று கூட்டத்திற்கு அழைப்போம்.

நாங்கள் கூட்டத்திற்கு அழைத்து, பேராசிரியர் மறுப்பு சொன்னதேயில்லை. எங்கள் ஒன்றியம், முழுக்க குக்கிராமங்களைக் கொண்டது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கிராமத்தில் சிறிய தெருவில்தான் கூட்டம் நடைபெறும். ஆனால் கழகத்தினரும், பொதுமக்களும் உற்சாகமாக திரண்டிருப்பார்கள்.

நான் புரிந்தவரை, அப்படி குக்கிராமத்தில் பேசுவதை பேராசிரியர் பெரிதும் விரும்பினார். எங்கள் ஒன்றியத்திற்கும் அவருக்கும் உருவான அதிக நெருக்கத்திற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். கூட்டங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதும் பேராசிரியருக்கு விருப்பமானது. முதுமையான காலகட்டத்திலும்கூட மணிக்கணக்கில் அமர்ந்து பொதுமக்களுக்கு சேலைகள், தையல் மெஷின், தேய்ப்புப் பெட்டிகள் என வழங்கியிருக்கிறார்.

பேராசிரியர் அன்பழகனுடன் புழல் நாராயணன்

எப்படிய்யா இவ்வளவு பெண்கள் கூட்டத்திற்கு வர்றாங்க…

எதிரே கூடியிருக்கும் கூட்டத்தை மிக கவனமாக உள் வாங்குவார் பேராசிரியர். ஒரு முறை, ‘யோ, எப்படிய்யா இவ்வளவு பெண்கள் கூட்டத்திற்கு வர்றாங்க… ரூபா கொடுத்து கூப்பிடுறியா?’ என நேரடியாகவே கேட்டார். ‘இல்லைய்யா, நலத்திட்ட உதவிகளை தவிர்த்து, எந்த ரூபாயும் கொடுக்கிறதில்லை’ என சொன்னேன். ‘பெண்கள் கட்சிக் கூட்டங்களுக்கு வர்றது பெரிய விஷயம்யா!’ என பாராட்டுவார்.

கூட்டங்களுக்கு வருகிற மூத்த நிர்வாகிகளை பெயர் கூறி அழைப்பார். இளைஞர்கள் என்றால், இன்னும் உற்சாகமாவார். அவர்களை அழைத்து, தனிப்பட்ட முறையில் விசாரித்து ஊக்கப்படுத்துவார். ஜூன் 3 கலைஞர் பிறந்த நாள் கூட்டத்திற்கும், மார்ச் 1 தளபதி பிறந்த நாள் கூட்டத்திற்கும் வருடம்தோறும் தவறாமல் பேராசிரியரை அழைத்து வந்திருக்கிறோம்.

கூட்டத்திற்கு அழைக்கும்போதே இன்னொரு விஷயத்தையும் சொல்வார். ‘போகிற வழியில், வேறு ஏதாவது நிகழ்ச்சி இருந்தா, என்னை பயன்படுத்திக்கோய்யா!’ என்பார். அந்த வகையில் பேராசிரியரின் பொதுக்கூட்டம் என்றால், வழியில் ஓரிரு கொடியேற்ற நிகழ்வுகளும் இருக்கும்.

பாராட்டுகள் ஆயுளைக் கூட்டும்!

வயதான முதியவர்களுக்கு உதவும் விதமாக எங்கள் ஒன்றியத்தில் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்தோம். அதாவது, ஏழை முதிய தம்பதிகளை தேடிப்பிடித்து அவர்களுக்கு கட்சி சார்பில் அறுபதாம் கல்யாணத்தை நடத்தி வைப்போம். தொடர்ந்து 3 ஆண்டுகள் இந்த நிகழ்வில் பேராசிரியர் கலந்துகொண்டு, 60-ம் கல்யாணத்தை நடத்தி வைத்தார். ‘எத்தனையோ திருமணங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வைத்திருக்கிறேன். 60-ம் கல்யாணத்தை நடத்தி வைக்கும் வாய்ப்பு எனக்கு இங்குதான் கிடைத்திருக்கிறது’ என பெருமிதத்துடன் ஒருமுறை குறிப்பிட்டார்.

கூட்டம் நடத்துகிறவர்களை உற்சாகப்படுத்த இன்னொன்றையும் அடிக்கடி கூறுவார். ‘நீ கூட்டம் நடத்துறதை பார்த்துட்டு, பலர் உனக்கு போன் செய்து பாராட்டுவார்கள். அதுவே உன் ஆயுளைக் கூட்டும்யா!’ என கூறுவார் பேராசிரியர். இதெல்லாம், எங்களுக்கு பூஸ்ட் மாதிரி!

ஓரிரு முறை நாங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்க விரும்பி, அந்த சமயத்தில் பேராசிரியர் உடல் நலிவுற்றிருந்த தருணங்கள் உண்டு. அப்போது பேராசிரியர் இல்லத்திற்கே பயனாளிகளை அழைத்துச் சென்று, நலத்திட்ட உதவிகளை வழங்க வைத்திருக்கிறோம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புழல் நாராயணன்

வாணவேடிக்கையை வெறுத்த பேராசிரியர் அன்பழகன்

கூட்டத்தில் எழுச்சியை விரும்புவாரே தவிர, பிரமாண்டத்தை அவர் ரசிப்பதில்லை. ஆரம்பகாலத்தில் ஜெயலலிதா ஆட்சி அவலங்களை கார்டூன்களாக சித்தரித்து பேராசிரியரின் கூட்டங்களுக்கு ‘8 பிட்’ போஸ்டர் அடித்திருக்கிறோம். அதைப் பார்த்தவர் ஒருமுறை என்னை அழைத்தார். ‘எதற்கு இவ்வளவு பெரிய போஸ்டர்? எத்தனை அடித்தாய்? எவ்வளவு செலவானது?’ என விசாரித்தார். பிறகு, ‘இவ்வளவு பெரிய போஸ்டருக்கு முதலில் சுவர் கிடைக்காது. 2 பிட் போஸ்டர் அடித்தால், இதைவிட சிறிய தெருக்களில் ஒட்ட முடியும். செலவும் குறையும்’ என ஆலோசனை கூறினார்.

மேடை அப்படி இருக்கவேண்டும்? வரவேற்பு இப்படி இருக்க வேண்டும்? என்கிற எதிர்பார்ப்பு பேராசிரியரிடம் இருந்ததில்லை. வாணவேடிக்கை போடுவதை சுத்தமாக வெறுத்தார். ‘வேட்டு வைக்காத!’ என்றே சொல்வார். கொளத்தூரில் எத்தனையோ நிகழ்வுகளில் பங்கேற்கும் தளபதியும் எளிமையான நிகழ்ச்சிகளை விரும்புவதையே பார்க்கிறோம். பிரமாண்டம் என்பது, எங்களைப் போல ஏற்பாடு செய்கிறவர்களின் ஆர்வ மிகுதிதான்.


திமுக தலைவராக 2018-ல் தளபதி பொறுப்பேற்பதற்கு முன்தினம் பேராசிரியரை அவரது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள், ‘நாங்க வாழ்கிற காலத்திலேயே கட்சிக்கு தலைவரை உருவாக்கிவிட்டோம்’ என்றார், முகம் முழுக்க சந்தோஷமாக! அதாவது, கலைஞரையும் குறிப்பிடும்விதமாக, ‘நாங்கள்’ என்றார். கலைஞர், பேராசிரியர் போன்ற தலைவர்கள் காலம் முழுக்க எங்கள் இதயத்தில் பயணித்து, எங்களை இயக்கிக் கொண்டிருப்பார்கள்’ என நினைவுகளை பகிர்ந்தார் புழல் நாராயணன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk general secretary k anbazhagan memories puzhal narayanan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X