Advertisment

‘இந்நேரம் கருணாநிதி ஆக்டிவாக இருந்திருந்தால்...?’ திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வெடித்த குரல்

பொதுவெளியில் பரவலாக பேசப்பட்ட அந்தக் குரல், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் வெடித்துக் கிளம்பியதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
dmk mla's meeting, m.karunanidhi, m.k.stalin, dmk, comparision between m.karunanidhi and m.k.stalin

பொதுவெளியில் பரவலாக பேசப்பட்ட அந்தக் குரல், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் வெடித்துக் கிளம்பியதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு!

Advertisment

‘திமுக தலைவர் கருணாநிதி ஆக்டிவா இருந்திருந்தால், இந்த ஆட்சியை இவ்வளவு நாள் நீடிக்க விட்டிருக்க மாட்டார்’ என்கிற குரல் உடன்பிறப்புகளைத் தாண்டி, பொதுவெளியிலும் பேசப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் இருந்து சமூக வலைதளங்களில் ஓயாத விவாதமாகவே இது ஓடிக்கொண்டிருக்கிறது.

அதாவது, உள்கட்சி குழப்பத்தால் தடுமாறும் அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிட்டு திமுக.வை ஆட்சிக்கு கொண்டு வரும் விவேகமும் வியூகமும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இல்லை என்பதுதான் இந்த விவாதத்தின் மையப் பொருள்! ‘திமுக அப்படி குறுக்கு வழியில் ஆட்சிக்கு வராது. கருணாநிதி எங்களுக்கு அப்படி கற்றுத் தரவில்லை. நேர்வழியில் மக்களை சந்தித்துதான் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். ஜெயலலிதா உடல் நலமில்லாமல் இருந்தபோதே அந்தச் சூழலை பயன்படுத்து, ஆட்சிக்கு வரக்கூடாது என கருணாநிதி கூறினார்’ என்றெல்லாம் இந்த விவாதங்களுக்கு பதில் சொல்லும்விதமாக ஸ்டாலின் பேசி வருகிறார்.

ஆனால், உடன்பிறப்புகளையே இந்தப் பேச்சு முழுமையாக திருப்திபட வில்லை. ‘நேர்வழியில் ஆட்சிக்கு வருவதுதான் இலக்கு என்றால், சட்டமன்றத்தில் சட்டையை கிழித்திருக்க அவசியம் இல்லையே?’ என்கிற விமர்சனமும் எழுகிறது. டிடிவி.தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்த உடனேயே திமுக சார்பில் கவர்னர் மற்றும் ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்புகள் அரசியல் கடமைதான்! அதில் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப விரும்புகிற திமுக.வின் அவசரமும் வெளிப்படுகிறது.

மெஜாரிட்டி இல்லாத ஒரு ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சி அவசரப்படுவதும் தப்பில்லை. ஆனால் ஏதோவொரு ரூபத்தில் அந்த முயற்சி நழுவிவிடுவதுதான் ஸ்டாலினின் இயலாமையாக விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து மறுபடியும் அரசியல் களம் சூடானது. இதையொட்டி செப்டம்பர் 19-ம் தேதி அவசரமாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை அறிவாலயத்தில் ஸ்டாலின் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் அவ்வப்போது கருணாநிதியின் மனசாட்சியாக முழங்கும் சென்னை எம்.எல்.ஏ. ஒருவர் பேசியதுதான் ஹைலைட்!

‘கலைஞர் ஆக்டிவா இருந்திருந்தா, இந்நேரம் அரசியல் மாற்றங்களை கொண்டு வந்திருப்பார் என வெளியே பேசிக்கொள்கிறார்கள். இது எனது கருத்து அல்ல. வெளியே பேசுவதை கூறினேன். நானும் கலைஞருடன் இணைந்து பணியாற்றியவன் என்ற அடிப்படையில் அவரது திறமைகளை அறிவேன். தளபதியுடனும் இணைந்து பணியாற்றுகிறேன். என்னைப் பொறுத்தவரை, தளபதியும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்’ என ஸ்டாலினையும் விட்டுக்கொடுக்க முடியாதவராக பேசியிருக்கிறார் அந்த எம்.எல்.ஏ.!

ஆனாலும், ‘கலைஞர் ஆக்டிவா இருந்திருந்தா, ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்திருப்பார்’ என்கிற கருத்தை ஸ்டாலின் முன்னிலையிலேயே நாசூக்காக அந்த எம்.எல்.ஏ. பேசிவிட்டதாக தலைமைக்கழக நிர்வாகிகள் தங்களுக்குள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். ஸ்டாலினுக்கு மேற்படி எம்.எல்.ஏ.வின் பேச்சு அதிர்ச்சிதான் என்றாலும், கூட்டத்தில் அவர் அதை வெளிப்படுத்தவில்லை.

அதே கூட்டத்தில் இன்னொரு சுவாரசியம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே, வட மாவட்ட எம்.எல்.ஏ. ஒருவர் கூட்டத்தை படம் எடுத்து ‘வாட்ஸ் அப்’பில் உலவ விட்டிருக்கிறார். அந்தப் படம், ஸ்டாலினுக்கு வலதுகரமான சென்னை எம்.எல்.ஏ. ஒருவரின் செல்போனுக்கும் வந்து சேர, அங்கேயே அதை ஸ்டாலினுக்கு காட்டியிருக்கிறார் அவர். ஆனாலும், ‘என்னப்பா இதெல்லாம்?’ என மெலிதான கண்டிப்புடன் அதைக் கடந்தார் ஸ்டாலின்.

முதல் நாளில் சில தீர்மானங்களை நிறைவேற்றிய ஸ்டாலின், அடுத்த நாள் (செப்.20) நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கும் என கூறியிருந்தார். எனவே வெளியூர் எம்.எல்.ஏ.க்கள் சென்னையிலேயே முகாமிட்டனர். ஆனால், நீதிமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அக்டோபர் 4 வரை தடை என்கிற உத்தரவோடு வழக்கு தள்ளி வைக்கப்பட்டதால், ஸ்டாலினுக்கு ஏமாற்றம்! அதனால் செப்டம்பர் 20-ம் தேதி கூடுவதாக இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து ஆனது!

இந்த ‘ரவுண்ட்’டிலும் திமுக.வுக்கு ஏமாற்றம்! அரசியலைத் தாண்டி, இந்த ஆட்சியை விரும்பாதவர்களுக்கும்தான்!

 

Dmk M Karunanidhi M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment