மார்ச் 15ல் கூடும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் என அறிவிப்பு

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் மார்ச் 15-ம் தேதி தொடங்கும் எனவும், அன்று காலை 10.30 மணிக்கு 2018-19ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் மார்ச் 15-ம் தேதி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், மார்ச் 15-ம் தேதி தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும், காவிரி விவகாரம் குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

×Close
×Close