முரசொலி இடம் பஞ்சமி நிலமா? தொடரும் விவாதம்

தமிழகத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பஞ்சமி நிலம் பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆனால், அப்போதெல்லாம் அது பெரிய அளவில் விவாதமாக மாறவில்லை. ஆனால், ஒரு திரைப்படம் ஒட்டுமொத்த மாநிலமே பஞ்சமி நில விவகாரம் பற்றி பேச வைத்துள்ளது. இதுவே ஒரு நல்ல படைப்பின் வெற்றி.

Tamil Nadu News Today
Tamil Nadu News Today

தமிழகத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பஞ்சமி நிலம் பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆனால், அப்போதெல்லாம் அது பெரிய அளவில் விவாதமாக மாறவில்லை. ஆனால், ஒரு திரைப்படம் ஒட்டுமொத்த மாநிலமே பஞ்சமி நில விவகாரம் பற்றி பேச வைத்துள்ளது. இதுவே ஒரு நல்ல படைப்பின் வெற்றி.

எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் கிட்டத்தட்ட தமிழகத்தில் அரை நூற்றாண்டு அரசியல் நிகழ்வுகளை குறியீடுகளாக புணைந்து திரையில் சொல்லிவிட்டது.

பஞ்சமி நிலம் என்றால் என்ன?

சென்னை மாகாணத்தில் நிலமற்றவர்களாக ஏழ்மை நிலையில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைக் கண்டு மனம் வருந்திய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரெமென் ஹீர் அம்மக்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தார். திரெமென் ஹீர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் இருந்தால் முன்னேற்றம் அடைவார்கள் என்று கருதி அவருடைய முயற்சியில் பிரிட்டி அரசின் ஒப்புதலோடு 1893 ஆம் ஆண்டு அவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டது. அப்படி நிலம் வழங்கினாலும், அதை ஆதிக்க சாதியினர் பண்ணையார்கள் பறித்துக்கொள்வார்கள் என்ற நிலை இருந்ததால் அந்த நிலத்தை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாங்கவோ விற்கவோ முடியும் மற்றவர்கள் யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது. அப்படி வாங்கினாலும் விற்பனை செய்தாலும் செல்லாது என்று அரசாணையும் வெளியிடப்பட்டது. அப்படி சென்னை மாகாணத்தில் 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.

அன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் நான்கு வர்ணத்தில் சேராதவர்கள் என்பதால் பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்டதால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் பஞ்சமி நிலம் என்று வழங்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட வகுப்பு (Deppressed class) மக்களுக்கு வழங்கப்பட்டதால் DC land என்று அழைக்கப்பட்டது.

பஞ்சமி நில விவகாரத்தில் விதிகள் மதிக்கப்படாமல் பெரும்பாலான நிலம் ஆதிக்க சாதியினரால் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டன. பல இடங்களில் நிலங்கள் ஆதிக்க சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டன. இது குறித்து தலித் தலைவர்கள் பலர் பஞ்சமி நிலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது அவை சட்டவிரோதமாக மற்றவர்களால் அபகரிப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தபோதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்துவந்தது.

பஞ்சமி நிலப் போராட்டம்

இந்த சூழலில் 1990-களில் அம்பேத்கர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவைத் தொடர்ந்து தமிழகத்தில் தலித் மக்களின் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்டம், காரணையில் ஆதிக்க சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று 1994 ஆம் ஆண்டு தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜான் தாமஸ், ஏழுமலை என இரண்டு தலித் இளைஞர்கள் பலியானார்கள்.

அப்போது, இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

தமிழகதில் பெரும் எழுச்சியுடன் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலித்துகளின் பஞ்சமி நிலத்துக்காக மண்ணுரிமை மாநாடு நடத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட பஞ்சமி நிலப் பிரச்னையை முன்னிறுத்தி அவ்வப்போது போராட்டங்களை நடத்தினாலும் அதில் அதிமுக, திமுக என இரு அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், இந்த போராட்டங்கள் மைய நீரோட்ட அரசியலில் விவாதமாக மாறாமல் போனது.

இந்த சூழலில்தான் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிருதாவூர் பங்களா அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக புகார்கள் எழுந்தன. அதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே போல, திமுகவின் முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்று எதிர் தரப்பில் புகார் கூறப்பட்டது. அதற்கு திமுக தரப்பில் மறுப்பு கூறப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையான தலித் கட்சியாக இருந்தபோதிலும் தேர்தல் அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட வேண்டிய நிர்பந்தத்தால் பஞ்சமி நில விவகாரத்தில் தனது அழுத்தத்தை குறைத்துக்கொள்ள வேண்டியதானது. இப்படி பஞ்சமி நில விவகாரம் கிணற்றுக்குள் கேட்கும் குரலாக மாறிப்போனது.

இந்த நிலையில்தான் வெற்றிமாறன் இயக்கி வெளியான அசுரன் படம் பஞ்சமி நில விவகாரத்தை தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியும் பெரு நெருப்பாக பற்ற வைத்தது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தைப் பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்துகாட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்” என்று டுவிட் செய்தார்.

மு.க.ஸ்டாலின் பாராட்டுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தாலும் எதிர்பாராத வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ், “பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!” என்று விமர்சனம் செய்தார்.

இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து விலகுவதாகவும் நிரூபிக்காவிட்டால் ராமதாஸ் அரசியலில் இருந்து விலகத் தயாரா என்று கேள்வி எழுப்பினார். அதோடு, முரசொலி இடம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்று முரசொலி இடத்தின் 1985 ஆம் ஆண்டு பட்டா ஆவணத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்த ராமதாஸ், “முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா? முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில்தான், பாஜகவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்துகு புகார் தெரிவிக்க, ஆணையம் தமிழக அரசு செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டது.

இதனால், மு.க.ஸ்டாலின் முரசொலி இடம் தொடர்பாக மேலும் விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “துளிகூட உண்மை இல்லாத, ஜமுக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய் குறித்து பா.ஜ.க. நேரத்தை வீணடிப்பதை விட ஜெயலலிதாவால் சிறுதாவூரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலத்தைக் கைப்பற்ற ராமதாஸுடன் இணைந்து செயல்படுவார்களா?”என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம். முரசொலி நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பது நிரூபிக்கப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டார்.

இப்படி நூற்றாண்டுக்கும் மேல் புறக்கணிக்கப்பட்டு வந்த தலித் மக்களின் பஞ்சமி நில விவகாரம் தமிழகத்தில் விவாதமாகி தொடர்கிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk murasoli land issues debate between ramadoss and mk stalin dc land panchamas land asuran movie

Next Story
திருவள்ளுவருக்கு இந்து அடையாளம் அளிக்க பாஜக டுவிட்டரில் பிரசாரம் செய்ய திட்டம்thiruvalluvar in saffron robes, BJP IT wing plan campaign, காவி உடையில் திருவள்ளுவர், திருவள்ளுவர், பாஜக, BJP plan to unveil the portrait of saint thiruvalluvar in saffron robes, bjp plan campaing into social media
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X