பேருந்து கட்டண உயர்வு போராட்டங்களை தூண்டிவிடுவதே திமுக தான்! - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிடுவதே திமுக தொழிற்சங்கங்கள் தான் என முதல்வர் பேட்டி

தமிழக அரசுக்கு நெருக்கடி அளிக்கவே பேருந்து கட்டணத்துக்கு எதிரான போராட்டங்களை எதிர்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய பேருந்து கட்டண உயர்வு கடந்த 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் டீசல் விலை 50 சதவீதம் உயர்ந்திருப்பதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

அரசின் இந்த கட்டண உயர்வு சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மிகவும் பாதித்தது. 10 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த பயணிகள் 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் போராட்டம் நடத்தினர். அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், உயர்த்தப்பட்ட கட்டணத்தில் சிறிதளவை குறைத்து அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அந்தக் கட்டண குறைப்பு இன்று (29-ம் தேதி) அமல் ஆகிறது.

இந்த நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை முழுமையாகக் குறைக்கக்கோரி, சென்னை கொளத்தூரில், இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் உட்பட பலர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து செய்தியாளர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழும்பினர். இதற்கு முதல்வர், “அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே பேருந்து கட்டணம் தொடர்பான போராட்டங்களை திமுக போன்ற எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டங்களை தூண்டிவிடுவது திமுகவின் தொமுச தொழிற்சங்கம்தான். கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது திமுகதான்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அண்டை மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர்தான், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான்.

திமுக ஆட்சிக்காலத்தில் இருந்த டீசல் விலை இப்போது இல்லை. திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து தொழிற்சங்க பெற்ற கடன் சுமார் ரூ 3329.15 கோடி. மக்கள் பயன்பெற வேண்டும் என்று எண்ணியே பேருந்து கட்டணம் சிறதளவு குறைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close