காவிரி விவகாரம்: மீண்டும் போராட்டக் களத்தில் திமுக! மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம்

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு இன்று வரை தீர்வு வராததைக் கண்டித்து திமுக சார்பில் இன்று மாலை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ஏப்ரல் 1ம் தேதி முதல் திமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில், ஏப்.3 ம் தேதி கடையடைப்பு போராட்டம், ஏப். 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம், ஏப் 7ம் தேதி முதல் 7 நாள் கொண்ட காவிரி உரிமை மீட்பு பயணம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மார்ச் 29 தேதி வரை கெடு அளித்தது உச்சநீதிமன்றம். இந்தக் கெடு முடிவடைந்த நிலையில், தமிழகத்திற்கு இன்று வரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதையடுத்து “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்தது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், உத்தரவைப் பின்பற்றாத மத்திய அரசைக் கண்டித்தது. மேலும் மே. 3ம் தேதிக்குள் காவிரி வாரியத்தின் வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவையும் அளித்தது.

இது போன்ற இழுபறிகளை கர்நாடக தேர்தலுக்காகவே மத்திய அரசு நடத்தி வருகிறது என்றும், காவிரி விவகாரத்தை வைத்து கர்நாடகாவி வோட்டுகள் பெற பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என்றும் பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், அலட்சியமாக நடந்துகொள்ளும் மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்து அடுத்தகட்ட போராட்டத்தில் களமிறங்கியுள்ளது திமுக. மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று மாநிலம் முழுவதும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்துகிறது. இந்தப் போராட்டம், தமிழக மக்களிடையே நிலைத்திருக்கும் ஒற்றுமையை உணர்த்தும் போராட்டமாக நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டம் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.

இப்போராட்டத்தில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதேபோல், சிவகங்கையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும், தஞ்சாவூரில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனும், பெரம்பலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனும், கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும், திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close