சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2006-2011 காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விருதுநகர் மாவட்ட லட்ச ஒழிப்புத்துறை தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை மீது 2012ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவல்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடத்தி வந்தது.
அதிமுக ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இதனால் வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரியும் தங்கம் தென்னரசு, அவரது மனைவி தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து 2022ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
அதுபோல 2006- 2011 காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட லட்ச ஒழிப்புத்துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோரை கடந்த ஜூலை 20ம் தேதி வழக்கிலிருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லட்ச ஒழிப்புத்துறை சார்ப்பில் மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துகொண்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”