அரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் : ரஜினி

ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுடன் 16ம் தேதி முதல் புகைப்படம் எடுத்து வருகிறார். நாளை வரை ரஜினி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளார்.

நான்காவது நாளான இன்று சுமார் 1000 ரசிகர்களை சந்திக்க உள்ளார். இதனால் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபம் முன்பு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்த ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அவர், ‘அரசியலுக்கு வருவது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. எனது கருத்துக்களை ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

ரசிகர்கள் தங்களது குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். ரசிகர்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ரசிகர்களுடன் செல்லவிட்ட நேரங்கள் மறக்க முடியாதவை. மீண்டும் அவர்களை சந்திக்க மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன். அடுத்த ரசிகர்கள் சந்திப்பு பற்றிய விபரங்களை விரைவில் வெளியிடுவேன்’ என்றார்.

தொடர்ந்து ரஜினியிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை எழுப்பிய போது, ‘அரசியல் பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். அது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை’ என்றார்.

நாளை 19ம் தேதி ரசிகர்கள் சந்திப்பு முடிகிறது. அன்று மாலை ரஜினி ரசிகர்களிடம் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல்கள் வருகிறது.

×Close
×Close